கால் வைக்கும் இடமெல்லாம் ஓபிஎஸ்க்கு கண்ணி வெடிதான்- ஜெயக்குமார் தாக்கு.!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரம் பூதாகரமாகி ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது.

இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பு அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது என எடப்பாடி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஓபிஎஸ் அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றைப் பயன்படுத்த நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்தத் தடையைத் தொடர்ந்து நேற்று ஓபிஎஸ்-இன் காரின் முகப்பில் இருந்த அதிமுக கொடி அகற்றப்பட்டது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “என்றாவது கடல் வற்றுமா? அண்ணாமலையை பொறுத்தவரை எப்பொழுதுமே ஒரு புரிதல் இல்லை என்று நினைக்கிறேன். கொக்கு காத்திருக்கும் ஆனால் கடல் எப்பொழுது வற்றி எப்ப கொக்கு கருவாடு சாப்பிடும். அதை முதலில் கேளுங்கள். கடல் வற்றி கருவாடு சாப்பிட நினைத்த கொக்கு குடல் வற்றி செத்ததாம். என்னைக்கும் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சிதான். நடக்காத விஷயத்தை பாஜக பேசி வருகிறது” என்றார்.

தொடர்ந்து ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு, ”வடிவேலு சொல்வார், ‘கால் வைத்த இடம் எல்லாம் கண்ணி வெடிதான்’ என்று, அது மாதிரிதான் ஓபிஎஸ்க்கு இன்று நடந்துகொண்டிருக்கிறது. சட்டத்தை யாரும் மீறவில்லை. 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் ஒருமித்த கருத்தை ஏற்றுக்கொண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சீராக சென்று கொண்டிருக்கிறது. உயர்நீதிமன்றம் அங்கீகாரம் கொடுத்துள்ளது; உச்சநீதிமன்றம் அங்கீகாரம் வழங்கியிருக்கிறது; எலக்சன் கமிஷன் அங்கீகாரம் கொடுத்துள்ளது. இப்படி அங்கீகாரங்கள் எங்களுக்கு கிடைத்துள்ள போது வீணாகக் குழப்பம் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் ஓபிஎஸ் சென்று கொண்டிருக்கிறார். அவர் எங்கே போனாலும் நீதி, நேர்மை, நியாயம், சட்டம் எல்லாம் எங்கள் பக்கம் இருப்பதால் எல்லா வெற்றியையும் நாங்கள்தான் பெறுவோம்.” என்றார்.