ஒ.பி.எஸ்-க்கு எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை… சட்டப்பேரவைக் கூட்டத்தை இ.பி.எஸ் அணி புறகணிப்பு..!

.தி.மு.க-வில் இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் மோதல் நிலவி வருகிறது. இதனால், அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அணி தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர்.

இ.பி.எஸ் அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச் செயலாளராக உள்ளார். அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள பிளவு தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், சட்ட ரீதியாக தீர்வு காணப்படாததால், சபாநாயகர், பன்னீர்செல்வத்துக்கு இடையூறு ஏற்படாமல், இறுதி முடிவு எடுக்க தீர்ப்பு வரும் வரை காத்திருப்பார் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் அக்டோபர் 17ம் தேதி தொடங்க உள்ளது. அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சட்டப் பேரவைக் கூட்டத்தில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி. உதயகுமாருக்கு அளிக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் அளித்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்று சட்டப் பேரவையில் ஆர்.பி. உதயகுமாருக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை அளிக்க மறுத்தால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் குழு இந்த சட்டப் பேரவைக் கூட்டத்தொடரை புறக்கணிக்க வாய்ப்பு உள்ளது.

இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் இரு பிரிவினரும் சபாநாயகர் அப்பாவு இடம் கடிதம் கொடுத்துள்ளனர். அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலாக உதயகுமார் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக இ.பி.எஸ் தரப்பில் கூறுகின்றனர். அதி.மு.க ஒருங்கிணைப்பாளர் தான்தான் என்று ஓ.பி.எஸ் கூறுவதால், சபாநாயகர் அப்பாவு இந்த விவகாரத்தில் கூர்ந்து கவனித்த பிறகே முடிவெடுப்பார்.

முதல்வர் நாற்காலிக்கு எதிரே உள்ள இரட்டை இருக்கை சோபாவில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் இருவரும் அமர்ந்து கொள்ளும் வகையில் இருக்கை வசதி இருப்பதால், சட்டப்பேரவையில் தனது போட்டியாளரான ஓ.பி.எஸ் உட்காரக் கூடாது என்பதில் பழனிசாமி குறியாக உள்ளார்.

எனவே, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் இருக்கையை சபாநாயகர் மாற்றாவிட்டால், சபாநாயகர் தங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்காததை கண்டித்து அ.தி.மு.க உறுப்பினர்கள் சட்டப்பேரவைக் கூட்டத்தை புறக்கணித்து அவையில் போராட்டம் நடத்துவார்கள் என்று தெரியவந்துள்ளது.

அ.தி.மு.க தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிச்சாமி தனது கட்சி தொண்டர்களுக்கு சனிக்கிழமை கடிதம் எழுதினார். அதில், அரசியல் பாதை எப்போதும் முள்ளும், கல்லும், துரோகங்களும், பொறாமைகளும், சதிகளும், போட்டிகளும் நிறைந்ததாகவே இருக்கும் என்றும், ரோஜாக்களால் நிரம்பியது அல்ல என்றும் கூறியுள்ளார்.

தற்போது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, தி.மு.க-வில் நான்கு முதல்வர்கள் இருப்பதாகவும், தி.மு.க அரசு மக்களுக்கு எதிரான அரசு என்றும் ஆளும் தி.மு.க. மீது எடப்பாடி பழனிசமி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

மாநிலத்தில் இந்தி திணிப்பதை எதிர்ப்பதில் அ.தி.மு.க உறுதியாக இருப்பதாகக் கூறிய எடப்பாடி பழனிசாமி, வாக்குகளைப் பெறுவதற்காக மொழிப் பிரச்சினையை தி.மு.க பயன்படுத்துவதாகவும், மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப பயன்படுத்தப்படுவதாகவும் கூறினார்.

தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், எப்போது வேண்டுமானாலும் தேர்தலை சந்திக்க அ.தி.மு.க தயாராக இருப்பதாகவும், அ.தி.மு.க மட்டுமே மக்களுக்காக உழைக்க முடியும் என்பதால் மக்கள் நலனுக்காக பாடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.