கோவை மாவட்டம் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, சப் இன்ஸ்பெக்டர் நேரு மற்றும் போலீசார் கிணத்துக்கடவு பஸ் நிலையம் அருகே நேற்று ரோந்து சுற்றி வந்தனர் . அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவரை போலீசார் கிணத்துக்கடவு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தனியாக விசாரணை நடத்தினர் .விசாரணையில் இவர் மதுரை மாவட்டம் சக்தி மங்கலத்தைச் சேர்ந்த தென்னரசு ( வயது 22) என்பது தெரிய வந்தது. இவரிடமிருந்த பிரிண்டர் செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவரது செல்போனை ஆய்வு செய்தபோது அதில் கேரள மாநில 3 மற்றும் 4 இலக்கம் எண்களை காண்பித்து லாட்டரி வாங்கினால் நிச்சயம் பரிசு வாங்கி தருவதாக வீடியோ ஒன்று இருந்தது. அது தொடர்பாக விசாரித்த போது ஆன்லைனில் லாட்டரி நடத்துவதாக சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணம் வசூலித்து மோசடி செய்தது தெரிய வந்தது .இதையடுத்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து தென்னரசை கைது செய்தார் .தென்னரசு மீது மதுரை மாவட்டம் கருப்பாயூரணி, பெருங்குடி, சிலைமான் ஆகிய காவல் நிலையங்களில் ஆன்லைன் லாட்டரி மோசடி வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது..