திமுக கூட்டணியில் புதிதாக சேர்ந்துள்ள தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை (ராஜ்யசபா) இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – எ.சுதீஷ் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது தொடர்பாக கூட்டணி ஒப்பந்தத்தில், “திராவிட முன்னேற்ற கழக தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் தேசிய முற்போக்கு திராவிட கழகப் பொருளாளர் எல்.கே.சுதீஷும் இன்று (03.03.2026) கலந்து பேசியதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்துள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு நடைபெற உள்ள மாநிலங்களவே (Rajya Sabha) தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கீடு செய்வது எனவும், இதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையின் போது திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த குழுவினரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் குழுவினரும் கலந்துபேசி போட்டியிடும் இடங்கள் குறித்து பேசி முடிவு செய்திட தீர்மானிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளார் சுதீஷ், “வரும் தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் வழங்கியுள்ள திமுகவுக்கு கட்சியும், பிரேமலதா விஜயகாந்த் நன்றியை தெரிவித்துகொள்கிறோம். மாநிலங்களவை வேட்பாளர் யார் என்பதை பிரேமலா அறிவிப்பார். அதன் பின்னர் வேட்புமனு தாக்கல் நடைபெறும்.வேட்பாளர் குறித்த அறிவிப்பை பிரேமலதா நாளை வெளியிடுவார். திமுகவுடன் முதலில் தற்போது ராஜ்யசபா இடம் குறித்த ஒதுக்கீடு இறுதியாகியுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் தொகுதி குறித்த பேச்சுவார்த்தை மற்றும் அடுத்தகட்ட முடிவுகள் ஒருவாரத்தில் தெரியவரும்” என்றார். பிரேமலதா விஜயகாந்த்தின் தம்பியான சுதீஷ் மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு அதிகம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தேமுதிக மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் விருப்பத்தின் பேரில் தான் திமுகவுடன் கூட்டணி வைப்பதாக கடந்த பிப்ரவரி 19ம் தேதி அறிவித்தார். 2005ம் ஆண்டு நிறுவப்பட்ட திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலில் களம் காண்பது இதுவே முதல்முறை.வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டு கட்சிகள், மதிமுக, தேமுதிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மக்கள் நீதி மய்யம், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழுவை ஏற்கனவே அமைத்துள்ளது. டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழுவில் கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராஜா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.







