ஊட்டி-கொண்டை ஊசி வளைவில் மினிவேன் கவிழ்ந்து விபத்து-சுற்றுலாவுக்கு வந்த கர்நாடகாவை சேர்ந்த 5 பேர் படுகாயம்..!

மேட்டுப்பாளையம்: கர்நாடக மாநிலம் ஒயிலாண்ட நல்லி பகுதியை சேர்ந்தவர் ரஹ்மத்துல்லா. இவரது மகன் அன்வர் பாஷா. இவர் சொந்தமாக மினி வேன் வைத்துள்ளார்.
சம்பவத்தன்று இவரது மினிவேனில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 16 பேர் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். நீலகிரியில் பல்வேறு இடங்களைசுற்றி பார்த்த அவர்கள், நேற்று தங்களது ஊருக்கு புறப்பட்டனர். வாகனத்தை அன்வர் பாஷா ஒட்டினார். மினிவேன் ஊட்டி சாலை 2-வது கொண்டை ஊசி வளைவில் வந்த போது பிரேக் பிடிக்காமல், சாலையில் இருந்த இடது பக்க சுவற்றில் மோதி மினிவேன் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த ஜெகதீஷ் படிகர்(30), மல்லன்ன கவுடா(29), பிரகாஷ்(29), சிவப்பா(41), நாகன்கவுடா(29) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உடனடியாக மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முருகநாதன் மற்றும் போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைச்சாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் படுகாயம் அடைந்த ஜெகதீஷ்படிகர்(30) மற்றும் மல்லன்ன கவுடா(29) ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். 3 பேர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர்.
இந்த விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.