மழையால் மிதக்கும் நெல்லை, தூத்துக்குடி:வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் “முப்படை”…

சென்னை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு சிக்கி தவிக்கும் மக்களை மீட்க ராணுவம், கடற்படை, விமானப்படை உள்ளிட்ட முப்படைகளும் ஈடுபட உள்ளது. சென்னையில் மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் பெருமழை கொட்டி தீர்த்தது. 36 மணி நேரம் இடைவிடாது பெய்த மழையால் மாநகரமே வெள்ளத்தில் மிதந்தது. இந்த மழை பாதிப்பில் இருந்து சென்னை மீண்டு வந்த அடுத்த சில நாட்களில் தென் மாவட்டங்களுக்கு மழை அச்சுறுத்தல் ஏற்பட்டது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களை கனமழை பதம் பார்த்தது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெய்த இந்த மழையால் பல இடங்கள் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் தண்ணீரை பார்த்தே பல ஆண்டுகள் ஆன சிற்றாறுகள், குட்டைகளில் கூட காட்டாற்று வெள்ளம் பாய்கிறது. காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 95 செ.மீட்டர் மழை பெய்து மிரட்டியது.

 சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதால் பல கிராமங்கள் தனித்தீவு போல காட்சி அளிக்கின்றன. வீடுகளை மூழ்கடிக்கும் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அத்தியாவசிய பொருட்களும் இன்றி தவிக்கும் நிலை உள்ளது. அதேபோல், மின்சாரம் தொலை தொடர்பு இணைப்புகளும் கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தாமிரபரணி ஆற்றில் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்னீர் ஓடுவதால் கரையோர கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நெல்லையின் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. பேருந்துகளே பாதி அளவுக்கு மூழ்கும் அளவுக்கு வெள்ளம் நீர் உள்ளது. மீட்பு நடவடிக்கைகளில் அந்தந்த மாவட்ட அதிகாரிகள் மற்றும் அண்டை மாவட்டஙக்ளில் இருந்த வந்த அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

: வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு சிக்கி தவிக்கும் மக்களை மீட்க ராணுவம், கடற்படை, விமானப்படை உள்ளிட்ட முப்படைகளையும் உதவிக்கு அழைத்து உள்ளதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார். இதன்படி, இன்று இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர் மூலமாக வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணி தொடங்க உள்ளது. அதேபோல், ஹெலிகாப்டர் மூலமாக உணவு பொட்டலங்களும் வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.