‘அட!!சூப்பர்!! வந்தாச்சு 9 காரட் தங்கம்’… நகை பிரியர்களுக்கு இனி கொண்டாட்டம் தான்… விலையும் இவ்வளவு குறைவா..?

‘தங்கம்’…என்ற நான்கு வார்த்தைக்கு மயங்காத பெண்களே இல்லை என்று சொல்லலாம். அந்தளவிற்கு தங்கத்தின் மீதான மோகம் இந்திய பெண்களுக்கு அதிகம் என்பதை மறுக்க இயலாது.

அதாவது ஒரு பெண்ணின் குழந்தை பருவம் தொடங்கி திருமணம் வரை தங்கம் ஒரு நிலையான இடத்தை பிடித்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

தங்கம் ஒரு அழகான, மதிப்புமிக்க உலோகம் மட்டுமின்றி அது அலங்கார ஆடம்பர பொருளாகவும், செல்வத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. சில பெண்கள் தங்கத்தை அழகுக்காகவும், சிலர் திருமணத்திற்கு சேர்த்து வைப்பதற்காகவும், வேறு சிலர் முதலீடாகக் கருதியும் வாங்குகிறார்கள்.

இந்தியாவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தாலும் பெண்களின் தங்கம் வாங்கும் மோகம் குறைந்ததே இல்லை. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் தான் தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக உள்ளதாக சர்வே கூறுகிறது. இந்தியாவில் மதுக்கடைகளுக்கு அடுத்தபடியாக நகைக்கடைகளில் தான் கூட்டம் அலைமோதுகிறது. இது தங்கத்தின் மீதான போதை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதை காட்டுகிறது.

இந்தியாவில் தங்கத்தின் மீதான அதீத மோகத்திற்கு என்ன தான் காரணம் என்று அலசினால், ஆசையும், கௌரவமும் என்ற இரண்டு விஷயங்கள் தான் நம் கண் முன் வந்து நிற்கிறது. பலரும் இங்கே மற்றவர்கள் பார்வைக்கு வசதியாக வாழ்கிறோம் என்பதைக் காட்டுவதற்காகவே தங்கத்தை அதிகளவில் வாங்கிக் குவிக்கிறார்கள்.

ஒரு சிலர் இதையும் தவிர்த்து வருங்கால சேமிப்பிற்கான சிறந்த முதலீடாகவும் தங்கத்தைப் பார்க்கின்றனர். இனி வரும் காலங்களில் தங்கம் விலை குறையாது ஏறிக்கொண்டே தான் இருக்கும் என்பதால் குடும்ப பெண்கள் முதல் ஐடியில் வேலை செய்யும் பெண்கள் வரை தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்யத்தொடங்கி விட்டனர்.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடனே இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி தங்கம் விலை இனிமேல் குறையாது ஏறிக்கொண்டே தான் இருக்கும் என்ற காரணத்தால் தங்கம் வாங்கி சேமிக்கவும், தங்கத்தில் மூதலீடு செய்யவும் விருப்புபவர்கள் தங்க பார்களாகவும், நாணயங்களாகவும் வாங்க தொடங்கியுள்ளனர்.

ஒரு சிலர் தங்கத்தின் அதீத ஆசையின் காரணமாக தூய்மை குறைவாக அதாவது 18 கேரட், 14 கேரட் அளவில் உள்ள தங்க நகைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மக்களின் தங்கம் வாங்கும் ஆர்வத்தை கவனித்த மத்திய அரசு அவர்களை ஊக்குவிக்கும் வகையில், ஹால்மார்க் தரநிலைகளில் 9 காரட் தங்கத்திற்கு கடந்த மாதம் ஒப்புதல் அளித்ததுடன், இந்திய தர நிர்ணய அமைப்பின் (BIS) ஹால்மார்க்கிங் அமைப்பின் 9 கேரட் தங்கமும் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.

BIS அமைப்பு கட்டாய ஹால்மார்க் பிரிவில் 9 கேரட் நகைகளை சேர்த்துள்ள நிலையில், இனி ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்ட பட்டியலில் 24KF, 24KS, 23K, 22K, 20K, 18K, 14K உடன் தற்போது 9K சேர்க்கப்பட்டுள்ளது.

24 காரட் தங்கம் என்பது வேறு எந்த உலோகங்களும் சேர்க்காத 99.9 தூய்மையான சுத்தமான தங்கமாகும். அதேநேரத்தில், 9 காரட் தங்கத்தில் 37.5% மட்டும் தூய்மையான தங்கமும், மீதமுள்ள 62.5%ல் செம்பு, வெள்ளி, துத்தநாகம் போன்ற அலாய் உலோகங்கள் கலக்கப்பட்டிருக்கும். அதாவது 9 கேரட் தங்கத்தில் 1000 கிராமில் 375 மட்டுமே சுத்தமான தங்கம் இருக்கும்.

தங்கத்தின் விலை அதிகரித்துகொண்டே வருவதால் தற்போது தங்கம் வாங்க ஆசைப்படுபவர்கள் 9 காரட் தங்க நகைகளை வாங்குவதற்கும் அதில் முதலீடு செய்யவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனெனில் 24 காரட் தங்கத்துடன் ஒப்பிடுகையில், 9 காரட் தங்கத்தின் விலையும் குறைவு, இதை வடிவமைப்பதும் எளிதும். எனவே குறைவான பட்ஜெட்டுடன் தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.

தற்போது 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10,053க்கும் ஒரு சவரன் ரூ.80,424க்கும் (நேற்றைய விலை)விற்பனையாகிறது. அதேநேரத்தில் 9 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,700க்கும், ஒரு சவரன் ரூ.29,600க்கும் விற்பனையாகிறது. அடுத்தடுத்து தீபாவளி, நவராத்திரி போன்ற பண்டிகைகள் வர உள்ளதால் மக்களின் தங்கம் வாங்கும் ஆர்வத்திற்கு 9 காரட் தங்கம் சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.