இனி தமிழில் பெயர் பலகை இல்லனா ரூ. 2,000 அபராதம் – புது விதி அமல்.!!

கடைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் தமிழல் கட்டாயமாக பெயர் பலகை வைக்க வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) அறிவித்துள்ளது.

இந்த விதியை பின்பற்றவில்லை என்றால் ரூ. 500 முதல் ரூ. 2000 வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இனி, தமிழில் பெயர் பலகை வைப்பது கட்டாயம்:

தமிழ்நாட்டில் உள்ள கடைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் வகையில் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகள், 1948, அறிமுகம் செய்யப்பட்டது. கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் உரிமைகள், கடைகள் திறக்கப்படும் நேரம், மூடப்படும் நேரம், விடுமுறை ஆகியவற்றை ஒழுங்குப்படுத்துவது மட்டும் அல்லாமல் கடைகள் பின்பற்ற வேண்டிய பல விதிகளை உள்ளடக்கியதுதான் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகள்.

இந்த நிலையில், இந்த விதிகளை பயன்படுத்தி வியாபாரிகளுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, கடைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் தமிழல் பெயர் பலகை வைக்கவில்லை என்றால் ரூ. 500 முதல் ரூ. 2000 வரை அபராதம் விதிக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை ரிப்பன் கட்டிடத்தில் தொழிலாளர் துறை ஆணையர் எஸ். ஏ. ராமன் தலைமையில் நேற்று சென்னை மாநகராட்சி மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், வர்த்தகர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உணவகங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

அப்போதுதான், கடைகளில் தமிழல் கட்டாயமாக பெயர் பலகை வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகள், 1948 விதி 18 இன் கீழ், தமிழில் பெயர் பலகைகளை வைக்காதவர்களுக்கு ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த விதியை மீறும் கேட்டரிங் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு கேட்டரிங் நிறுவனங்கள் சட்டம், 1958, பிரிவு 23 இன் கீழ் ரூ. 500 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அதிகாரிகள், “கண்டிப்பாக செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக, கலெக்டர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர் துறை, தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம், தமிழ் வளர்ச்சித் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வர்த்தகம் மற்றும் உணவு சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இதில் அடங்குவர்.

உத்திகளை வகுத்தல், விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்துதல், கிராம பஞ்சாயத்துகளுடன் ஒருங்கிணைந்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல் மற்றும் மாதாந்திர மறுஆய்வுக் கூட்டங்களை நடத்துதல் ஆகியவற்றை இந்த குழுக்கள் மேற்கொள்ளும்” என்றார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக கடை உரிமையாளர்கள் மற்றும் தொழில் பிரதிநிதிகளுடன் நேரடியாக ஈடுபடுமாறு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.