இனி சுதந்திரத்திற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட ஆவணங்களையும் ஆன்லைனில் பெற முடியும்.!!

சென்னை: சுதந்திரத்திற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை கூட ஆன்லைனில் இனி பெற முடியும். அதாவது சுமார் 1865-ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட 10 கோடி பத்திரங்களின் நகலை கூட ஆன்லைனில் இனி பெற முடியும்.

இதற்கான வசதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டின் மாநில வரி வருவாயில் முக்கிய பங்கு வகிப்பது வணிகவரித்துறை தான். சொத்துக்களை தங்கள் பெயரில் பதியும் போது அதற்காக முத்திரைத் தீர்வை வரியை கட்டுகிறார்கள். இதேபோல் பத்திரம், பட்டா என பல்வேறு வகையில் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. திருமண பதிவு, குத்தகை பதிவு, வீடு, நிலம், அடுக்குமாடி பெயர் மாற்றம் போன்றவற்றால் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது.

அதிக வருவாய் ஈடடித்தரும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயல்பாடுகளை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகிறது. பத்திரங்களை ஆன்லைனில் பார்க்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. ஈசி போட்டு பார்ப்பது. ஆன்லையிலேயே பட்டாவிற்கு விண்ணப்பிப்பது, போலி பத்திரங்களை தடுக்க ஆதாரை கட்டாயமாக்கியது. பத்திரப்பதிவுகளை வீடியோவாக பதிவு செய்தல் உள்பட பல்வேறு ஆவணங்களை டிஜிட்டல் வழியாக பெறமுடியும். தற்போதைய நிலையில் போலியாக பத்திரங்களை பதிவு செய்வது மிக கடினம் ஆகும். அந்த அளவிற்கு வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களும் புதிததாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோட்டில் ரூ.14 கோடியே 30 லட்சம் செலவில் ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டிடம், சத்தியமங்கலத்தில் ரூ.1 கோடியே 66 லட்சம் செலவிலும், கோபிச்செட்டிபாளையத்தில் ரூ.1 கோடியே 90 லட்சம் செலவிலும் வணிகவரி அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கிறது.

திருச்சி துறையூரில் ரூ.1 கோடியே 95 லட்சம் செலவில் வணிகவரி அலுவலகக் கட்டிடம், புதுக்கோட்டையில் ரூ.85 லட்சத்து 53 ஆயிரம் செலவில் வணிக வரி கட்டிடம் கட்டப்பட்டுள்ளன. நெல்லை மாவட்ட துணை கமிஷனர், தூத்துக்குடி சரக அலுவலகம், உதவி கமிஷனர், வட்ட அலுவலகங்கள் என மொத்தம் 4 அலுவலகங்களுக்கு தூத்துக்குடியில் ரூ.4 கோடியே 49 லட்சம் செலவில் ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது.

அதேபோல் ரூ.3 கோடியே 62 லட்சம் செலவில் அரகண்டநல்லூர் மற்றும் சத்திரப்பட்டியில் சார்பதிவாளர் அலுவலகங்கள் கட்டப்பட்டிருக்கிறது. சுமார் ரூ.28.77 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடங்களை முதல்வர்மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து நேற்று திறந்து வைத்தார்.

இதுதவிரர, சார்பதிவாளர் அலுவலகங்களில் 1865-ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட 10 கோடி ஆவணங்களின் சான்றிட்ட நகலை பொதுமக்கள் ஆன்லைன் மூலமாக பெறும் சேவை மற்றும் சார்பதிவாளர் அலுவலகங்களில் உள்ள பதிவறைகளில் ரூ.6.75 கோடி செலவில் பொருத்தப்பட்ட 2 இணையவழி புகைப்படக் கருவிகள் ஆகியவற்றையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் 150 ஆண்டுகளுக்கு முன்பாக சொத்து ஆவணங்களையும் இனி ஆன்லைனில் பார்க்க முடியும். யாருடைய சொத்தையும் இனி ஏமாற்ற முடியாது. பத்திரங்களில் வில்லங்கம் இருந்தால் எளிதாக அறிந்து கொள்ள முடியும். தவறான பதிவுகள் நடப்பது கடினமாகிவிடும்.