2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிடுவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, வாக்குப்பதிவு முடிவுகளை முன்கூட்டியே அறிவிப்பது வாக்காளர்களின் மனநிலையைப் பாதிக்கக்கூடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் 9-ம் தேதி காலை 7 மணி முதல் ஏப்ரல் 29-ம் தேதி மாலை 6:30 மணி வரை வாக்குப்பதிவிற்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை நடத்தவோ அல்லது அவற்றை அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் வாயிலாக வெளியிடவோ முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.பல கட்டங்களாகத் தேர்தல் நடக்கும் சூழலில், அனைத்துப் பகுதிகளிலும் வாக்குப்பதிவு முழுமையாக முடிந்து அரை மணி நேரம் கழித்தே இத்தகைய முடிவுகளை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.மேலும், வாக்குப்பதிவு முடிவதற்கு முந்தைய 48 மணி நேரக் காலத்தில் எந்தவிதமான கருத்துக்கணிப்புகளையும் அல்லது தேர்தல் தொடர்பான ஆய்வு முடிவுகளையும் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட மின்னணு ஊடகங்களில் காட்சிப்படுத்தக் கூடாது.இந்த விதிகளை மீறிச் செயல்படும் நபர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் எனத் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி எச்சரித்துள்ளார்.








