அரசியலும் வேண்டாம்… கட்சியும் வேண்டாம்… எலான் மஸ்க்கின் புதுக்கட்சி தொடங்கும் திட்டம் ரத்து..!

லகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான டெஸ்லா தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கும் தனது திட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளார்.

அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழின் சமீபத்திய அறிக்கை, இந்த முக்கிய முடிவை வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஒரு மாபெரும் செலவு மசோதாவில் கையெழுத்திட்டபோது, எலான் மஸ்க் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். “இந்த பைத்தியக்காரத்தனமான செலவு மசோதா நிறைவேற்றப்பட்டால், அடுத்த நாளே ‘அமெரிக்கா கட்சி’ உருவாக்கப்படும்” என்று எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அறிவித்தார். அந்த மசோதா ஜூலை 4 அன்று கையெழுத்திடப்பட்டதும், “இன்று அமெரிக்கா கட்சி உருவாக்கப்பட்டுள்ளது” என்று மீண்டும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆனால், ஓராண்டுக்கு மேல் அமெரிக்க அரசியலில் டிரம்ப்பின் ஆலோசகராகவும், அரசு செலவினங்களை குறைப்பதற்கான குழுவின் தலைவராகவும் இருந்த மஸ்க், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். அதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

ஜே.டி. வான்ஸுடனான உறவு: டிரம்ப் தனது அரசியல் வாரிசாக கருதும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸுடனான உறவை எலான் மஸ்க் வலுப்படுத்த விரும்புகிறார். ஒரு புதிய கட்சியை தொடங்குவது, குடியரசுக் கட்சியின் வாக்குகளை பிரித்து, வான்ஸின் 2028 அதிபர் தேர்தல் கனவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் அஞ்சுவதாக கூறப்படுகிறது.

வணிகத்தில் கவனம்: முதலீட்டாளர்கள் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் குழு உறுப்பினர்கள், எலான் மஸ்க் அரசியலை விட்டுவிட்டு, தனது நிறுவனங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்துள்ளனர். டெஸ்லா பங்குகளின் விலையில் ஏற்பட்ட சரிவும் இதற்கு ஒரு காரணம்.

அமெரிக்காவில் புதிய அரசியல் கட்சியை உருவாக்குவது மிகப்பெரிய செலவு மற்றும் சவால்களை கொண்டது. ஏற்கனவே பல பில்லியன் டாலர்களை டிரம்ப் மற்றும் குடியரசு கட்சிக்கு ஆதரவாக செலவிட்ட மஸ்க்கிற்கு, கட்சியின் அடித்தளத்தை உருவாக்குவது, நிதி திரட்டுவது போன்ற நடைமுறைச் சிக்கல்கள் பெரும் சுமையாக இருக்கும்.

எலான் மஸ்க்கின் இந்தத் திட்டத்திற்கு டிரம்ப் ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்தார். “மூன்றாவது கட்சிக்கு அமெரிக்க அரசியலில் இடமில்லை” என்று அவர் வெளிப்படையாக கூறியிருந்தார். ஜே.டி. வான்ஸ், மஸ்க் குடியரசு கட்சிக்குள் இருந்து கொண்டே மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

எலான் மஸ்க் தனது ‘அமெரிக்கா கட்சி’ திட்டத்தை கைவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், அவரது கவனம் இப்போது தனது வணிகங்கள் மற்றும் 2028-ல் ஜே.டி. வான்ஸை ஆதரிப்பது போன்ற மாற்று வழிகளில் திரும்பியுள்ளது.