மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் அவர்களின் இந்திய வருகை, இரு நாடுகளுக்கு இடையேயான பந்தத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இந்த சந்திப்பில், இருநாட்டு தலைவர்களும் பல்வேறு முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தனர்.
கடந்த ஆண்டு மொரீஷியஸில் தொடங்கப்பட்ட யுபிஐ மற்றும் ரூபே கார்டு சேவைகளுக்கு பிறகு, இப்போது உள்ளூர் நாணயங்களை பயன்படுத்தி வர்த்தகத்தை எளிதாக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.
எரிசக்தி மாற்றத்தில் இந்தியா மொரீஷியஸுக்கு பெரும் ஆதரவு அளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 100 மின்சார பேருந்துகள் மொரீஷியஸுக்கு வழங்கப்படவுள்ளன. இதில், முதல் 10 பேருந்துகள் ஏற்கனவே மொரீஷியஸை அடைந்துவிட்டன.
டாரின் நீர்வீழ்ச்சியில் 17.5 மெகாவாட் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க இந்தியா உதவ உள்ளது.
அதேபோல் மனித வள மேம்பாட்டுத் துறையில் இரு நாடுகளும் நீண்ட காலமாக ஒத்துழைத்து வருகின்றன. இதுவரை 5,000-க்கும் மேற்பட்ட மொரீஷியஸ் குடிமக்கள் இந்தியாவில் பயிற்சி பெற்றுள்ளனர். மொரீஷியஸில் ‘அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இயக்குநரகம்’ ஒன்றை நிறுவ இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
இந்திய ஐஐடி மெட்ராஸ் மற்றும் இந்திய தோட்ட மேலாண்மை நிறுவனம், மொரீஷியஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சி, கல்வி மற்றும் புத்தாக்கத்தில் ஒத்துழைக்க ஒப்பந்தங்கள் செய்துள்ளன.
சுதந்திரமான, திறந்த, பாதுகாப்பான, நிலையான மற்றும் செழிப்பான இந்திய பெருங்கடல் பகுதியை உருவாக்குவது இரு நாடுகளின் பொதுவான முன்னுரிமையாகும். இந்த இலக்கை அடைய, மொரீஷியஸ் நாட்டின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் கடலோர காவல் திறனை மேம்படுத்துவதில் இந்தியா உறுதியளித்துள்ளது.
மொரீஷியஸ் கடலோர காவல்படைக் கப்பல்களின் பழுதுபார்க்கும் பணிகள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. மேலும், 20 மொரீஷியஸ் அதிகாரிகள் இந்தியாவில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்தியா மற்றும் மொரீஷியஸ் இரண்டு வெவ்வேறு நாடுகள் என்றாலும் இரண்டு நாடுகளுக்கும் தனித்தனி கரன்சி என்றாலும் இனிமேல் வர்த்தகங்கள் அனைத்தும் யூபிஐ, ரூபே கார்ட் அல்லது இரு நாடுகளின் கரன்சிகளில் தான் பணப்பரிமாற்றம் செய்யப்படும். டாலரில் வர்த்தகம் கிடையாது என்பதில் இரு நாடுகளும் உறுதியுடன் உள்ளன. எனவே இந்தியா, டாலருக்கு எதிராக காயை நகர்த்த ஆரம்பித்துவிட்ட நிலையில், இதேபோல் ஒவ்வொரு நாட்டிலும் தங்கள் சொந்த கரன்சியில் வர்த்தகம் செய்ய இந்தியா தொடங்கினால், அமெரிக்காவும் ஆட்டம் காணும், டாலரும் ஆட்டம் காணும் என்பது குறிப்பிடத்தக்கது,