பணியின் போது போக்குவரத்து காவலர்கள் மொபைல் போனில் பேசுவதிலேயே தீவிரமாக உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தனது கடுமையான அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்திற்கு வரும் வழியில் இதனை நேரில் கண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தீவிரமான போக்குவரத்து நெரிசல் மற்றும் சிக்னல் நேரங்களில் கூட காவலர்கள் மொபைலில் பேசிக்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். காவலர்களின் இந்த கவனக்குறைவான செயல்பாடு பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் விபத்துகளுக்கு வழிவகுப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். இதற்கு முன்பாக கடந்த 2019-ஆம் ஆண்டிலும் இது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் பின்னர் உயர் அதிகாரிகள் பல சுற்றறிக்கைகளை அனுப்பினாலும், காவலர்களிடம் இன்னும் உரிய விழிப்புணர்வு மற்றும் மாற்றம் ஏற்படவில்லை என நீதிபதி வருத்தம் தெரிவித்துள்ளார். எனவே, இந்த விவகாரத்தைக் காவல்துறை ரீதியாக தீவிரமாக எடுத்துக்கொண்டு, களத்தில் உள்ள அனைத்து போக்குவரத்து காவலர்களுக்கும் உரிய விழிப்புணர்வையும் அறிவுறுத்தல்களையும் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது






