தமிழ்நாடு, கேரளாவில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி ரைட்-பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் போராட்டம் ..!

சென்னை: தமிழ்நாடு, கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருக்கு தொடர்புடைய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டல், தீவிரவாத பயிற்சி முகாம்கள் நடத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சோதனை நடத்தி வருகின்றனர். தீவிரவாத அமைப்புக்களில் சேரும் வகையில் இளைஞர்களை தவறாக வழிநடத்துவதாகவும், பிஎப்ஐ மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் 60 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன் அடிப்படையில் கேரளாவில் 50 இடங்களிலும் தமிழ்நாட்டில் 10 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திண்டுக்கல், கடலூர், கோவை, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, கோவையில் சிஆர்பிஎப் வீரர்களின் பாதுகாப்புடன் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் தெலுங்கானா, ஆந்திராவில் சோதனை நடத்திய என்ஐஏ அதிகாரிகள், பிஎப்ஐ நிர்வாகிகள் 4 பேரை கைது செய்தனர்.

என்.ஐ.ஏ சோதனையை கண்டித்து சென்னை புரசைவாக்கம் பிஎப்ஐ அலுவலகம் முன் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். என்ஐஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட பிஎப்ஐ, எஸ்டிபிஐ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்