போலி தகவல்களை தடுக்க உதவும் புதிய தொழில்நுட்பம்- ஹரியானா கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு..!

மிஸ் இன்ஃபர்மேஷன்’ எனப்படும் தவறான தகவல்களைப் பரப்பும் நடைமுறை ஊடகத் துறையில் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க பல முன்னணி ஊடகங்கள் விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்தி வருகின்றன. கடந்த 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் டிஜிட்டல் மீடியா எனப்படும் இணையதள செய்தித்துறை வளர்ச்சி அடையத் தொடங்கியது. கிட்டத்தட்ட அனைவரது கையிலும் இன்று ஸ்மார்ட்போன் தவழ்ந்துவரும் நிலையில் செய்தி இணையதளங்கள் பல உருவாகிவிட்டன. டிஜிட்டல் விளம்பரங்கள் முன்னணி வலைதளங்களுக்கு குவிந்து வருவதால் இது ஓர் லாபகரமான தொழிலாகி வருகிறது.

இதனால் பலர் செய்தி வளைதளங்களைத் தொடங்கி வருகின்றனர். இதில் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவி வருகின்றன. இந்த வதந்திகளுள் சில, திட்டமிட்டு பரப்பப்படுகின்றன. வேறு நாட்டில் நடந்த ஓர் கலவரத்தின் படத்தை எடுத்து இந்தியாவில் நடந்ததுபோல இந்த செய்தித் தளங்களில் காட்டப்படுகின்றன.

செய்தித் தளங்களுக்குப் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சிலர் இவ்வாறு செய்கின்றனர். இதனால் இவர்களுக்கு விளம்பரங்கள் மூலம் லாபம் கிடைக்கும். இந்த போலி செய்தி பேஸ்புக், இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாகப் பரவுகின்றன. பலர் இவற்றை உண்மை என நம்பி கமெண்ட் பதிவிடுகின்றனர்.

இதுவே மிஸ் இன்பர்மேஷன் எனப்படுகிறது. இதனால் முன்னணி ஊடகங்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. 2020 ஆம் ஆண்டு துவங்கி மிஸ் இன்ஃபர்மேஷன் ஊடகத்துறை சந்திக்கும் முக்கிய சவால்களில் ஒன்றாகிப் போனது. சமீபத்தில் விழாவொன்றில் கலந்துகொண்ட பிரதமர் மோடி இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலத்தின் சுராஜ்குந்த் பகுதியில் நடைபெற்ற மாநில உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, பொதுமக்கள் வாட்சாப் குறுஞ்செய்திகளை மற்றவருக்குப் பகிரும்போது கவனமாக இருக்கவேண்டுமென வலியுறுத்தி உள்ளார். மேலும் போலி செய்திகளைக் களைய புதிய தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக உறுதியளித்துள்ளார்.