வெறிச்சோடியிருந்த திருப்பூரில் குவியத் தொடங்கிய புதிய ஆர்டர்கள்.!!

மெரிக்க வரியால் ஆடை ஏற்றுமதி நகரமாக விளங்கிய திருப்பூர் வெறிச்சோடியிருந்த நிலையில் தற்போது குவியத் தொடங்கியுள்ள புதிய ஆர்டர்களால் பரபரப்பாக காணப்படுகிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த 50 சதவீத வரியால் அமெரிக்க ஏற்றுமதிகள் பாதிப்பை சந்தித்ததால் கடந்த சில வாரங்களாக திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் கடும் பின்னடைவை சந்தித்தன. இந்நிலையில் தற்போது வடக்கே தொடங்கியுள்ள நவராத்திரி கொண்டாட்டம் தொடர்ந்து தீபாவளி வரை நீடித்து செல்லும் என்பதால் முழு விழாக்காலமும் புத்தாடைகளுக்கான தேவைகள் அதிகரித்துள்ளது.

இதனால் திருப்பூரில் ஆடைகள் உற்பத்தி மீண்டும் சூடுபிடித்து நடந்து வருகிறது. திருப்பூரில் தயாரிக்கப்படும் ஆடைகள் மும்பை, டெல்லி, கேரளா, ஆந்திரா என பல மாநிலங்களிலும் விற்பனை செய்யப்படும் நிலையில் அந்தந்த மாநில ஆடை டிசைன்களை திட்டமிட்டு சரியாக தயாரிக்கத் தொடங்கியுள்ளனர். ஆண்டு முழுவதும் திருப்பூரில் நடக்கும் மொத்த வர்த்தகத்தில் 35-45 சதவீதம் தீபாவளி கால ஆர்டர்கள் என்பதால் திருப்பூர் பின்னாலாடை தொழில்கள் மீண்டும் சூடுபிடித்துள்ளது. மேலும் தற்போதைய ஜிஎஸ்டி வரிக்குறைப்பு போன்றவற்றால் மக்களின் வாங்கும் சக்தியும் அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது.