தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற ஜூன் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைசெயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் தொழில் முதலீடுகளின் தற்போதைய நிலை குறித்தும், புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது. மேலும் ஆன் லைன் சூதாட்டத்தின் காரணமாக கடந்த 10 மாதங்களில் 25 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனவே ஆன் லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. குறிப்பாக ஆன் லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க சட்டம் தொடர்பாக ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. எனவே இது தொடர்பாக ஆராய்ந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் சட்டம் இயற்றப்படும் என கூறப்படுகிறது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் சிறையில் உள்ள மேலும் 6 பேரை விடுவிக்க தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாகவும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.செஸ் ஒலிம்பியாட் போட்டி அடுத்த மாதம் சென்னையை அடுத்துள்ள மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் தொடர்பாகவும் முதலமைச்சர் தலைமையில் நடைபெறவுள்ள அமைச்சரவையில் ஆலோசிக்கப்படவுள்ளது. ஏற்கனவே அமைச்சரவை கூட்டம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply