புதிய தொழிலாளர் சட்டங்களை தொழில் நிறுவனங்கள் இன்று முதல் அமல்படுத்துவதால் தொழிலாளர்களுக்கான பண பயன்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்தியாவில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த பல்வேறு தொழிலாளர் சட்டங்கள், நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாகவோ அல்லது சுதந்திரம் அடைந்த பின்னர் அதாவது, 1930-ம் ஆண்டு முதல் 1950-ம் ஆண்டு வரை இயற்றப்பட்டவையாக இருந்தன. அப்போது இருந்த நாட்டின் பொருளாதார சூழல் மற்றும் உலக அளவிலான தொழிலாளர்கள் நிலை இப்போது மாறியுள்ளன.
நாட்டில் நடைமுறையில் இருந்த 29 மத்திய தொழிலாளர் சட்டங்கள் சிக்கல் நிறைந்ததாகவும், பல்வேறு சட்டங்களாகவும் சிதறுண்டு தற்போதைய காலத்துக்கு பொருந்தாத வகையில் இருந்தன. அதனால் அச்சட்டங்களை எளிமைப்படுத்த மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுத்தது.
அதன்படி, 29 சட்டங்களுக்கு மாற்றாக, தொழிலாளர் ஊதியச் சட்ட விதி 2019, தொழில் துறைத் தொடர்புகள் சட்ட விதி 2020, சமூகப் பாதுகாப்புச் சட்ட விதி 2020, தொழில்முறைப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிடச் சூழல் சட்ட விதி 2020 ஆகிய 4 சட்டங்கள் 5 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு சட்டமாகின.
இவை கடந்த ஆண்டு, நவ.21-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இதை பெரும்பாலான நிறுவனங்கள் உடனடியாக அமல்படுத்தவில்லை. இன்று தொடங்கும் புதிய நிதியாண்டில் இருந்து அமல்படுத்துகின்றன. இந்த புதிய சட்டத்தில், தொழிலாளரின் மொத்த ஊதியத்தில், அதாவது நிறுவனத்தின்
வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய நிதி பங்களிப்பு, விடுப்புக்கு ஈடாக பணம் பெறுதலுக்கான பங்களிப்பு உள்ளிட்டஅனைத்தும் சேர்த்த மொத்த ஊதியத்தில் அல்லது மொத்தசிடிசியில் (CTC) 50 சதவீதத்தைஅடிப்படை ஊதியமாக கணக்கிட வேண்டும் என்ற முக்கிய அம்சம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு நிறுவனங்கள் அடிப்படை ஊதியத்தை நிர்ணயிக்கும்போதும், தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி சேமிப்பும், அதற்கு இணையாக நிறுவனத்தின் பங்களிப்பும் அதிகரிக்கும். அதன் பயனாக வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியம் அதிகமாக கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் விடுப்புக்கு ஈடாக பணமாக பெறும் தொகையும் அதிகமாகும். மேலும் ஓய்வுபெறும்போது பணிக்கொடையும் அதிகமாக கிடைக்கும்.
அதே நேரத்தில், இச்சட்டத்தின் மூலம் ஊதியத்தின் ஒரு பகுதி சேமிப்பாக செல்வதால், தற்போது மாதந்தோறும் தொழிலாளர்களின் கைக்கு கிடைக்கும் ஊதிய அளவு குறைய வாய்ப்புள்ளது. இந்த புதிய சட்டத்தில், 40 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பணிக்கொடை பெறுவதற்கு 5 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டிய அவசியமில்லை. ஓராண்டு பணியாற்றினாலே பணிக்கொடை பெற முடியும்.
கடந்த 2014-ம் ஆண்டு வரை, வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை நிர்ணயிப்பதற்கான ஊதிய உச்சவரம்பு ரூ.6,500 ஆக இருந்தது. நிறுவனங்களின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு உயர்ந்து விடக்கூடாது என்பதால், அடிப்படை ஊதியத்தை உயர்த்தாமல் ரூ.6,500 என்ற அளவிலேயே நிறுவனங்கள் வைத்திருந்தன. அப்போது, வருங்கால வைப்பு நிதி விதிகளின்படி, அடிப்படை ஊதியத்தில் 12 சதவீதம், அதாவது ரூ.780-ஐ நிறுவனங்கள் செலுத்தின.
தொழிலாளர்களின் ஊதியத்தில் இருந்தும் அதே அளவு பிடித்தம் செய்து, வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் செலுத்தி வந்தது. இது தொழிலாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்தும் என்பதை அறிந்த மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு செப்.1-ம் தேதி முதல் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை நிர்ணயிப்பதற்கான ஊதிய உச்சவரம்பை ரூ.15 ஆயிரமாக உயர்த்தியது. அதனால், நிறுவனங்களின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு ரூ.1800 ஆக உயர்ந்தது. தற்போது அமலாகியுள்ள புதிய தொழிலாளர் சட்டத்தால் நிறுவனங்களின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு மேலும் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.









