தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்-வானிலை மையம் தகவல் .!!

சென்னை வானிலை மையம் :

தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் நேற்று காற்று அழுத்த தாழ்வு நிலை உருவானது..

தற்போது தென்கிழக்கு வங்க கடல் மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவுகிறது. இது கிழக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது வடக்கு திசையில் அந்தமான் கடலோர பகுதி வழியாக நகர்ந்து 20-ந் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது 21-ந் தேதி மேலும் புயலாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடலோர பகுதியில் 22-ந் தேதி காலை நிலைபெறக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் இன்று வீசக் கூடும். 19-ந் தேதி இடையிடையே மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும், 20-ந் தேதி மணிக்கு 75 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

21-ந் தேதி அந்தமான் கடல் பகுதி, மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும் இடையிடையே மணிக்கு 90 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். இந்த பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும்.

மேலும் தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்ப நிலையைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்று அறிவித்து உள்ளது.