ஆதார் அட்டையில் புதிய மாற்றம்.. என்ன பயன்… வாருங்கள் உள்ளே பார்க்கலாம்..!

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India – UIDAI) ஆதார் அட்டையில் முக்கிய மாற்றமொன்றை செய்துள்ளது.

அதென்ன மாற்றம்? அதனால் மக்களுக்கு என்ன பயன்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

நாட்டில் ஆதார் அடையாள அட்டை தொடர்பான மோசடிகளை தடுக்கும் முயற்சியின் கீழ், ஆதார் அட்டையில் புதிய தொழில்நுட்ப மேம்படுத்தல்களை கொண்டு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் கீழ் ஆதார் எண்ணை வழங்கும் யுஐடிஏஐ, ஆதார் அட்டைக்கான புதிய 2-அடுக்கு பாதுகாப்பு நெறிமுறையை (Security mechanism) உருவாக்கியுள்ளது.

யுஐடிஏஐ-யின் இந்த புதிய பாதுகாப்பு நெறிமுறையானது ஆதார் அடிப்படையிலான கைரேகை அங்கீகாரத்துடன் (Aadhaar-based fingerprint authentication) தொடர்புடையது. யுஐடிஏஐ-யின் கூற்றுப்படி, ஆதார் அடிப்படையிலான கைரேகை அங்கீகாரமானது, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் இயந்திர கற்றல் (Machine Learning) அடிப்படையிலான ஒரு பாதுகாப்பு பொறிமுறையாகும்.

இதன் கீழ் (இனிமேல்) பதிவு செய்யப்பட்ட கைரேகையின் துல்லியமானது, விரல் நுணுக்கம் மற்றும் விரலின் படம் ஆகிய இரண்டின் கலவையின் கீழ் சரிபார்க்கப்படும். இந்த இரண்டு-காரணி (Two-factor) அல்லது இரண்டு-அடுக்கு (Two-layer) அங்கீகாரமானது ஆதார் தொடர்பான மோசடி வேலைகளை தவிடுபொடியாக்கும்.

ஆதார் அமைப்பின் கூற்றுப்படி, இந்த புதிய பாதுகாப்பு பொறிமுறையானது வங்கி (Banking) மற்றும் நிதியியல் (Financing), தொலைத்தொடர்பு (Telecom) மற்றும் அரசு துறைகள் (Government sectors) போன்ற பிரிவுகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இது ஆதார் வழியிலான கட்டண முறையையும் வலுப்படுத்தும்.

கடந்த 2022 டிசம்பர் மாத இறுதிக்குள், ஆதார் அங்கீகாரம் வழியாக நடந்த ஒட்டுமொத்த பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 88.29 பில்லியனை தாண்டியுள்ளது. அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு 70 மில்லியன் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை கைரேகை அடிப்படையிலான அங்கீகாரங்களாகவே இருந்துள்ளன. ஆகையால் தான் ஆதாரில் கைரேகை தொடர்பான புதிய பாதுகாப்பு கொண்டு வரப்பட்டுள்ளது.

அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வசதிகள் / அம்சங்கள் எல்லாம் ஒருபக்கம் இருக்க, ஒவ்வொரு ஆதார் அட்டை பயனரும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய சில அடிப்படை விஷயங்களும் உள்ளன. அவைகளை பின்பற்ற தவறினால் உங்களுக்கும், உங்கள் ஆதார் அட்டைக்கும் யாராலும் பாதுகாப்பு தர முடியாது.

01. ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு வரும் ஒடிபி-ஐ யாருடனும் பகிர கூடாது.

02. ஒவ்வொரு முறையும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திய பிறகு, குறிப்பிட்ட மொபைல் / கம்ப்யூட்டரில் இருந்து ஆதார் அட்டை ஃபைல்-ஐ டெலிட் செய்ய மறக்க வேண்டாம்

03. அவ்வப்போது உங்களுடைய ஆதார் அட்டையின் அங்கீகார வரலாற்றை ( Aadhaar authentication history) சரிபார்க்கவும்.

04. ஆதார் தொடர்பான மோசடிகளில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க ஆதாரை லாக் (Lock) மற்றும் அன்லாக் (Unlock) செய்யும் வழக்கத்தை கையாளுங்கள்.