போத்தனூர் அருகே ரயில் மோதி அடையாளம் தெரியாத மூதாட்டி பலி..

கோவை போத்தனூர் ரெயில் நிலையம் அருகே 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ரெயில் மோதி கால்கள் துண்டாகி ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டு இருந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அந்த மூதாட்டியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் அவரிடம் விசாரித்ததில் அவர் பெயர் அலமேலூ (70) என்று மட்டும் கூறினார். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அலமேலூ சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரெயில் மோதி கால்கள் துண்டாகி இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை. இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வருகின்றனர்.