புதுடெல்லி: என்சிஇஆர்டி 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆர்டி) சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில், “நமது சமூகத்தில் நீதித் துறையின் பங்கு” என்ற தலைப்பிலான பாடம் இடம்பெற்றிருந்தது. அதில், நீதித் துறையின் ஊழல் குறித்து விவரிக்கப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து உள்ளது.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு நேற்று வழக்கை விசாரித்தது. அப்போது பல கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். அதற்கு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பதில் அளிக்கையில் கூறியதாவது: “இந்த விவகாரத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். புத்தகத்தில் குறிப்பிட்ட அத்தியாயத்தை எழுதியவர்கள் இனிமேல் புத்தகக் குழுவிலோ, கல்வித் துறையின் பணியிலோ ஈடுபடுத்தப்பட மாட்டார்கள். சந்தைக்குச் சென்ற 32 புத்தகங்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த புத்தகமும் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபில் ஆகியோர் ஆஜரானார்கள்.பின்னர் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்த விவகாரத்தில் மத்திய கல்வித் துறை செயலர், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி உரிய விளக்கம் அளிக்க வேண்டும். நீதித் துறையில் ஊழல் என்ற அத்தியாயத்துடன் வெளியான 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. அச்சு மற்றும் டிஜிட்டல் உள்ளிட்ட அனைத்து வகையிலும் பாடப் புத்தகத்தை நீக்க வேண்டும்.
இதுதொடர்பாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலும், மத்திய அரசும் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். இந்த உத்தரவுகளைச் செயல்படுத்தியது தொடர்பான பிரமாண பத்திரங்களை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கல்வி துறையின் முதன்மைச் செயலாளர்கள் 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்தப் புத்தகத்தை அச்சிடவோ, டிஜிட்டல் வடிவில் பகிரவோ தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறுவோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மார்ச் 11-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.









