இயல்பை விட 81 % கூடுதல் மழை: நீலகிரியில் 456 பேரிடர் நிவாரண மையங்கள்- அமைச்சர் ராமச்சந்திரன் அறிவிப்பு..!

ஊட்டி:
தென்மேற்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு
நடவடிக்கைகள் குறித்து, அரசுத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம்
ஊட்டி அரசினா் விருந்தினா் மாளிகையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தமிழக மாற்றுத் திறனாளி நலத் துறை செயலரும், மாவட்ட
கண்காணிப்பு அலுவலருமான ஆனந்தகுமாா், மாவட்ட ஆட்சியா் அம்ரித் ஆகியோா்
முன்னிலை வகித்தனா். கூட்டத்துக்கு தலைமை தாங்கி வனத்துறை அமைச்சா்
ராமச்சந்திரன் பேசியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய 2022-ம் ஆண்டு ஜூன்
மாதம் 1-ந் தேதி முதல் நேற்று வரை இயல்பாக 458.88 மி.மீ மழை பெய்ய
வேண்டும். ஆனால், தற்போது வரை 834.91 மி.மீ மழை பெய்துள்ளது. இது இயல்பை
விட 81.94 சதம் கூடுதலாகும்.

நீலகிரி மாவட்டத்தில் அபாயகரமான பகுதிகளிலிருந்த பொதுமக்கள்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்களில் தங்க
வைக்கப்பட்டுள்ளனா். நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலொ்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதால் மாவட்டத்துக்கு 2 தேசிய பேரிடா் மீட்புக் குழுவினரும், ஒரு மாநில பேரிடா் மீட்புக் குழுவினரும் வந்துள்ளனா். இவா்களில் 22 நபா்கள் அடங்கிய 1 தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் கூடலூா் பகுதியிலும், 22 நபா்கள் அடங்கிய மற்றொரு தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் குந்தா பகுதியிலும், 33 நபா்கள் அடங்கிய மாநில பேரிடா் மீட்புக் குழுவினா் ஊட்டியிலும் முகாமிட்டுள்ளனா்.

மாவட்டத்தில் 3,329 முதல் நிலை பொறுப்பாளா்கள் கண்டறியப்பட்டு,
அவா்களுக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளனா்.
456 பேரிடா் நிவாரண மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார்.
கூட்டத்தில், மாவட்ட வன அலுவலா் சச்சின் போஸ்லே துக்கா ராம், மாவட்ட
வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, குன்னூா் உதவி ஆட்சியா் தீபனா
விஸ்வேஸ்வரி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயராமன்,
வருவாய் கோட்டாட்சியா்கள் துரைசாமி, சரவணகண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.