நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம்…. சென்னையில் 90% பேருந்துகள் இயங்கவில்லை-பொதுமக்கள் பள்ளி,கல்லூரி மாணவர்கள் அவதி.!!

இந்த கூட்டமைப்பில் ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஏ.ஐ.சி.சி.டி.யு., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 12 மத்திய தொழிற்சங்கங்கள் இடம் பெற்றுள்ளன. இது தவிர தமிழகத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை உள்ளிட்ட சங்கங்களும் இதை ஆதரித்துள்ளன. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான வங்கி, எல்.ஐ.சி. உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் பங்கேற்பதாக அறிவித்துள்ளன. தமிழகத்திலும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இன்று தொடங்கிய வேலைநிறுத்த போராட்டத்தில் இந்த தொழிற்சங்கங்களை சேர்ந்த பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பேருந்து போக்குவரத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் 90% பேருந்துகள் இயங்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இன்று திங்கள்கிழமை என்பதால், வேலைகளுக்கு செல்லும் மக்களும், பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். பேருந்து நிலையங்களில் கூட்டம் அலை மோதுகிறது.

வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ள தொழிற்சங்க நிர்வாகிகள் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன. இதனால், 2 நாட்களும் போக்குவரத்து, வங்கி சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் சுமார் 15 ஆயிரம் போலீசாரும், தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.