கோவையில் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு குறித்த தேசிய பேரிடர் குழு ஒத்திகை..!

மாநில மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தலா ஐந்து இடங்களில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பேரிடர், வெள்ளபெருக்கு தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாதிரி ஒத்திகையானது நடைபெற்று வருகின்றது. இதில் கோவை மாவட்டத்தில் புலியகுளம், தேக்கம்பட்டி, சூலூர், வால்பாறை, ஆனைமலை ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு துணை கலெக்டர்கள் தலைமையில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் அவசரகால பேரிடர் குழுவும் தயார் செய்யப்பட்டு மாதிரி ஒத்திகை செய்யப்பட்டது. இந்த ஒத்திகையில் வருவாய்த்துறை, மருத்துவத்துறை, போலீஸ், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சி துறை, விமானப்படை மற்றும் இதர துறைகளை சேர்ந்த 50 அலுவலர்கள் வீதம் மொத்தம் 250 பேர் பங்கேற்றனர்.

இந்த ஒத்திகையின் போது குளத்தில் வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணியை ஹெலிகாப்டர் மூலம் மீட்பது குறித்த ஒத்திகை செய்யப்பட்டது.