அரவான் கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு தண்ணீர், இனிப்பு வழங்கிய இஸ்லாமியர்கள்..!

கோவை துடியலூர் பகுதியில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான அருள்மிகு அரவான் திருக்கோவில் உள்ளது. இங்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடத்தப்படுகிறது. அதேபோல இந்த ஆண்டு வெகு விமர்சையாக திருவிழா நடைபெற்றது.இத்திருவிழாவிற்கு துடியலூர் மற்றும் சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, ஊர்வலமாக செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில், கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள 300 வருடங்களுக்கு மேற்பட்ட பழமையான பள்ளிவாசல் வழியாக பக்தர்கள் ஊர்வலமாக சென்றபோது, அங்கு மாலை தொழுகையை முடித்த இஸ்லாமியர்கள் மனிதநேயத்தின் அடையாளமாக அந்த பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
மதங்களை தாண்டிய இந்த அன்பும் ஒற்றுமையும் நிரம்பிய செயல், திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.இந்த நிகழ்வில் அரவான் கோவில் நிர்வாகிகள், பக்தர்கள், பொதுமக்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு இஸ்லாமியர்களின் மனிதநேயத்தை பாராட்டினார்கள்