அச்சத்தில் பெட்ரோல் நிலையங்களில் குவிந்த வாகன ஓட்டிகள்!

பெட்ரோல் நிலையங்கள் மூடப்படுமோ?என்ற அச்சத்தில், வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையங்களில் காத்திருப்பது தமிழகம் முழுதும் நடைபெறுகிறது.

அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான், போரால் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், உணவக உரிமையாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். வீட்டு உபயோக சிலிண்டர் விற்பனையிலும், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டு வருவதால், காலதாமதம் ஆவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதே நிலை டீசல், பெட்ரோலுக்கும், வந்துவிடுமோ?என்ற கலக்கத்தில், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பெட்ரோல், டீசல், நிலையங்களில், மக்கள் குவியத் தொடங்கியுள்ளனர். நீண்ட வரிசையில் காத்திருந்து, இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில், பெட்ரோல் நிரப்பி வருகின்றனர். மேலும் கூடுதலாக கேன்களிலும், பெட்ரோலை வாங்கிச் செல்கின்றனர். அடுத்த ஒரு மாதத்திற்கு, பெட்ரோல், டீசல், இருப்பு இருப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ள நிலையில், மக்கள் அச்சத்தின் காரணமாக, எரிபொருளை வாங்கி சேமித்து வருகின்றனர்.