கோவையில் 135 தொழுநோயாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை.!!

நாடு முழுவதும் தொழுநோய் பாதிப்பை கட்டுப்படுத்த 1983-ம் ஆண்டு தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதன்கீழ் கூட்டு மருந்து சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் தொழுநோய் பாதிப்பின் தீவிரத்தன்மை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், அங்கஹீனம் ஏற்படுவதும் பெருமளவு குறைந்துள்ளது. தொழுநோயால் உடல் அங்கஹீனம் ஏற்படுபவர்களுக்கு மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அங்கஹீனம் ஏற்படுபவர்களுக்கும், 40 சதவீதத்துக்குமேல் பாதிப்புள்ளவா்களுக்கும் அரசு சார்பில் மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் 135 பேர் மாதாந்திர உதவித் தொகை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இது தொடர்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநர் (தொழுநோய்) ப.சிவக்குமாரி கூறியதாவது: தொழுநோயினால் உடல் அங்கஹீனம் மற்றும் 40 சதவீதத்துக்கும்மேல் பாதிப்பு உள்ளவர்களுக்கு நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. நரம்புகள் பாதிக்கப்படுவதால் அப்பகுதியில் உணர்ச்சியற்ற நிலை ஏற்படுகிறது.
ஏதாவது வேலையில் ஈடுபடும்போது தெரியாமல் உடலில் அடிபட்டாலும் பெரியளவில் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. இதனால், இவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில், தொழுநோயாளிகள் தங்களை பராமரித்துகொள்ளும் விதமாக அரசு சாா்பில் ரூ.1,500 மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இந்த உதவித் தொகை மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. விரைவில் மாதாந்திர உதவித் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும், மருதமலையில் தொழுநோயாளிகள் பராமரிப்பு மையமும் செயல்பட்டு வருகிறது என்றார்.