மோடி சிறந்த நபர்: அவர் தலைமையில் இந்தியா சிறப்பாக இருக்கிறது – புகழ்ந்து தள்ளிய ட்ரம்ப் ..!

வாஷிங்டன்: பிரதமர் மோடி சிறந்த மனிதர். அவர் தலைமையில் இந்தியா சிறப்பாக இருக்கிறது.

அவர் எனது நல்ல நண்பரும் கூட என்று அடுக்கடுக்காக இந்தியாவுக்கும், மோடிக்கும் பாராட்டுகளைக் குவித்துள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

முன்னாள் அதிபர் ட்ரம்ப் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், “நான் அமெரிக்க அதிபராக இருந்தபோது இந்தியாவுடன் நல்லுறவைப் பேணினேன். பிரதமர் மோடி சிறந்த நபர். அவர் முன் நிறைய சவால்கள் இருந்தும். அவர் இந்தியாவை சிறப்பாக வழிநடத்துகிறார். அவரது பணி அபாரமானது. இன்றும் அவர் எனக்கு சிறந்த நண்பர் தான். இந்தியாவுக்கு என்னைவிட சிறந்த நண்பர் இருந்ததே இல்லை” என்றார்.

கடந்த 2019 செப்டம்பரில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, ஹூஸ்டன் நகரில் நடந்த ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் மூலம் மோடிக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிட்டியது. இதனை சுட்டிக்காட்டிய ட்ரம்ப், அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் மோடியைப் போல் தனக்கும் நல்ல ஆதரவு இருக்கிறது என்று கூறினார்.

 அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் குறித்து கேள்விக்கு, “அதுவும் நடக்கலாம். அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீண்டும் கர்ஜிக்க செய்ய வேண்டும். இப்போது அமெரிக்க பொருளாதாரம் மந்தமாக இருக்கிறது. அதை மீட்டெடுக்க வேண்டும். அதேபோல் அம்ரிக்காவின் சுதந்திரத்தன்மை இன்னும் அதிகமான சக்தியுடன் திகழ வேண்டும். இது தான் எனது இலக்கு. கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்கா இந்த இரண்டையும் இழந்துள்ளது. அதை மீட்டெடுப்போம்” என்றார். 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிடுவாரா என்ற விவாதங்கள் எழுந்துவரும் சூழலில் அவரது இந்தப் பேட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.