வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார் அமைச்சர் வினோத்

மிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான தவெக அரசின் முதல் ‘பட்ஜெட்’ தாக்கல் செய்யப்பட்டது.

இன்று தமிழக சட்டசபையில் தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் துறை அமைச்சர் வினோத், 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.இதில் விவசாய கடன் தள்ளுபடி தொடர்பான கூடுதல் அறிவிப்புகள் வெளியாகுமா? என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ. 3,500 ஆகவும், கரும்பு டன்னுக்கு ரூ. 5,000 ஆகவும் உயர்த்தி வழங்குதல், உழவர்களுக்கு உரிமைத் தொகையை உயர்த்தி வழங்குவது உள்பட புதிய அறிவிப்புகளை அரசு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கூறி காத்துள்ளனர். இதற்கிடையே மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை தந்தனர்.

வேளாண் துறை அமைச்சர் வினோத், 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

2021-க்கு பிறகு செயற்கை நுண்ணறிவு, தரவு சார் நிர்வாகம், உழவர் செயலி உள்ளிட்டவற்றால் விவசாயம் புதிய பரிணாமம் அடைந்துள்ளது என்றார்.

விளைபொருட்களுக்கு உரியவிலை பெறும் வகையில் வேளாண்மை நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. வேளாண் துறை பாதிக்கப்பட்டால் வேறு எந்த துறையும் சரியான பாதையில் செல்லாது.

வேளாண்மையையும் உழவர் நலனையும் ஒரு சேர காக்க வேண்டும் என அரசு நினைக்கிறது.

உற்பத்தி செலவு உயர்வால் விவசாயிகள் திணரும் நிலை உள்ளது.உழவர் நலம், நீர்வளங்களை பெருக்குதல் மற்றும் பாதுகாத்தல், ஆராய்ச்சி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.

வேளாண் விளைப்பொருட்களுக்கு 100 சதவீதம் பயிர்க்காப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காகப் பிரதமர் மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 14 தொகுப்புகளுக்கு மாநில அரசின் நிதியாக ரூ.648 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான இலவச மும்முனை மின்சாரத் திட்டக் கட்டணத் தொகையாக மின்சார வாரியத்திற்கு ரூ.7,432.58 கோடி வழங்கப்படும்.

விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் ரூ.132 கோடி மதிப்பீட்டில் குறுவை தொகுப்பு திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

உயிர்ம வேளாண் பரவலாக்க சிறப்பு திட்டத்தில் 20,000 ஏக்கருக்கு தலா ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

ரூ.4 கோடி மதிப்பீட்டில் 1 கோடி விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் வழங்கப்படும் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு 20 சதவீதம் கூடுதல் மானியம், சூரியசக்தி மின்மோட்டாருக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

ரூ. 30 லட்சத்தில் பயிர்ளின் செயல்விளக்க திடல்கள் அமைக்கப்படும்.

பருத்தி உற்பத்தியை பெருக்கிட ரூ.27.21 கோடியில் பருத்தி மறுமலர்ச்சி இயக்கம். 40,000 பருத்தி விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும்.