நடுத்தர மக்களே உஷார்!! ஜிஎஸ்டி வரியை உயர்த்த முடிவு: மத்திய அரசின் அடுத்த திட்டம்.!!

இந்தியாவின் மறைமுக வரியை மொத்தமாக மாற்றிய ஜிஎஸ்டி-யில் அவ்வப்போது பல மாற்றங்களை ஜிஎஸ்டி கவுன்சில் தனது வரி விதிப்பில் மாற்றங்களைச் செய்து வரும் நிலையில் சில வாரங்களுக்கு முன்பு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரியை மறு சீரமைப்புச் செய்ய முடிவு செய்யப்பட்டது

இதன் படி தற்போது ஜிஎஸ்டி மிகவும் முக்கியமான முடிவை எடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் சாமானிய மக்களுக்கு அதிகப்படியான பாதிப்பு ஏற்பட உள்ளதாகத் தெரிகிறது.

மோடி தலைமையிலான மத்திய அரசு அமலாக்கம் செய்துள்ள ஜிஎஸ்டி வரி அமைப்பின் படி0, 5, 12, 18, 28 சதவீதம் என 5 பிரிவுகளாக உள்ளது. இந்த வரி அமைப்பில் 12 மற்றும் 18 சதவீத வரி பிரிவை இணைந்து 15 அல்லது 16 சதவீத வரியாக ஜிஎஸ்டி வரி விதிப்பு அளவீட்டை மறுசீரமைப்புச் செய்வதாகப் பேச்சுவார்த்தை நடந்தது.

ஆனால் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 5 சதவீத வரி பலகையை 8 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்குக் கூடுதல் வரி வருமானம் கிடைப்பது மட்டும் அல்லாமல் மாநில அரசுகள் மத்திய அரசை நம்பியிருக்கும் நிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 சதவீத வரி பலகையை 8 சதவீதமாக உயர்த்தும் மாநில நிதியமைச்சர்கள் குழு தனது அறிக்கையை இந்த மாத இறுதிக்குள் ஜிஎஸ்டி கவுன்சிலில் சமர்ப்பிக்க வாய்ப்பு உள்ளது. இந்த அறிக்கையின் மூலம் விரைவில் வரி மாற்றம் நடைமுறைப்படுத்தலாம்.

மாநில நிதியமைச்சர்கள் குழு சமர்ப்பிக்கும் இந்த அறிக்கையில் ஜிஎஸ்டி வரி வருவாயை உயர்த்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள், குறைந்த வரி விதிப்பு பிரிவை உயர்த்துவது மற்றும் வரிப் பலகை மறுசீரமைப்புச் செய்வது குறித்தும் பல முக்கியப் பரிந்துரைகள் இதில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிஎஸ்டி வரி விதிப்பில் 5 சதவீத பலகையை 8 சதவீதமாக உயர்த்தினால் மத்திய அரசுக்கு ஒரு ஆண்டுக்கு 1.50 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் வரி வருவாய் கிடைக்கும். மக்களுக்கான தேவையான முக்கிய உணவுப் பொருட்களை உள்ளடக்கிய இந்த வரிப் பலகையில் 1 சதவீதம் அதிகரித்தால் ஆண்டுக்கு ரூ. 50,000 கோடி வருவாய் ஈட்ட முடியும்.

சாமானிய மற்றும் நடுத்தர மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களுக்கு 0 சதவீத வரி விதிக்கப்பட்டும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது, இல்லையெனில் மிகக் குறைந்த வரி பலகையான 5 சதவீத வரி விதிக்கப்படுகிறது. தற்போது இந்த 5 சதவீத வரியை உயர்த்துவதன் மூலம் அதிகம் பாதித்கப்படபோவது நடுத்தர மக்கள் தான்.

அதே சமயம் ஆடம்பர மற்றும் சிகரெட் போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் மிக உயர்ந்த வரியான 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. மேலும் இப்பிரிவில் இருக்கும் பல பொருட்களுக்குச் செஸ் வரியும் விதிக்கப்படுகின்றன. ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட இந்தச் செஸ் வசூல் பயன்படுத்தப்படுகிறது.