முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மார்ச் 9அமைச்சரவை கூட்டம்- நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல்..!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் மார்ச் 9ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச் மாதம் நடக்க உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 கொடுக்கும் திட்டம் வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக ஈரோடு கிழக்கில் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு கஜானாவை அதிமுக காலி செய்துவிட்டது. அது மீட்டெடுக்க தாமதம் ஆகிவிட்டது. இப்போதுதான் கஜானா மீண்டு வருகிறது. இந்த நிலையில் மார்ச் மாதம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று அறிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும் நடப்பாண்டு முடிவதற்குள் நிறைவேற்றப்படும் என்று கூறி இருந்தார். இதனால் திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை, கேஸ் சிலிண்டர் மானியம் ரூ.100 உள்ளிட்ட அறிவிப்புகள் வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் வரும் மார்ச் 9ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் 2023-24ம் ஆண்டு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளது பற்றி விரிவாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக இன்று மாலை சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். இதனால் பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அனைத்து விவரங்களையும் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.