40 ஆண்டுகளில் சென்னையின் பல பகுதிகள் தீவுகளாக மாறும் – சுற்றுச்சூழல் ஆய்வுகள் எச்சரிக்கை.!!

கடல்நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருப்பதால் 30 அல்லது 40 ஆண்டுகளில் சென்னையின் பல பகுதிகள் தீவுகளாக மாறும் என்று சுற்றுச்சூழல் ஆய்வுகள் எச்சரித்துள்ளதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றம் குறித்து வெளியாகியுள்ள சர்வதேச ஆய்வறிக்கைகள் குறித்து விவாதிக்கும் கவன ஈர்ப்பு உரையாடல் நிகழ்ச்சி, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்தப்பட்டது.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், திமுக எம்.பி. கனிமொழி, தமிழ்நாடு காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், திட்டக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், காலநிலை மாற்றத்தால் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் அபாயங்கள் நேரிட இருப்பதாக ஆய்வறிக்கைகளில் எச்சரிக்கப்பட்டிருப்பது குறித்தும், பாதுகாப்புக்கான வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர், கடல்நீர் மட்டம் உயர்வதால் உலக அளவில் பாதிக்கப்படக்கூடிய 12 நகரங்களின் பட்டியலில் சென்னையும் இடம்பெற்றிருப்பதாகக் கூறினார்.