கோவை: தர்மபுரியில் விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்த மக்னா யானையை கடந்த 6-ந் தேதி பிடித்து கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாப்சிலிப் வனத்தில் வனத்துறையினர் விட்டனர்.
2 நாட்களுக்கு முன்பு மக்னா யானை வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்தது.
அதன் பின்னர் வனத்திற்குள் செல்லாமல் ஊருக்குள்ளேயே சுற்றி திரிந்து வருகிறது. கடந்த 21-ந் தேதி வெளியே வந்த யானை, செம்மனாம்பதி, கோவிந்தனூர், பொள்ளாச்சி, ஆத்து பொள்ளாச்சி வழியாக கிணத்துக்கடவு பகுதிக்கு வந்ததது. பின்னர் அங்கிருந்து நேற்று மதுக்கரை வனப்பகுதியில் நடந்து வந்தது. அப்போது அங்கு ஆடு மேய்த்து கொண்டிருந்த தொழிலாளியை லேசாக உரசி விட்டு, அது தன் போக்கில் நடந்தவாறே சென்றது.
தொடர்ந்து அங்குள்ள கிராமங்களுக்குள் புகுந்து வெகுநேரமாக சுற்றி திரிந்த யானை ஒரு வீட்டில் டிரம்மில் வைத்திருந்த தண்ணீரை பார்த்ததும் ஆனந்தத்தில் ஆர்ப்பரித்து, அதனை குடித்து, தன் உடலிலும் பீய்ச்சி அடித்து கொண்டது. பின்னர் அங்கிருந்து பிள்ளையார்புரம் நோக்கி சென்ற யானை அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு, தனது நடை பயணத்தை மீண்டும் தொடங்கியது. விடிய, விடிய மக்னா யானை நடந்து கொண்டே இருந்தது. வனத்துறையினரும் யாருக்கும் எந்தவித பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில் பாதுகாப்பாக யானைக்கு முன்னும், பின்னும் ஜீப்பில் சென்றனர்.
இன்று காலை மக்னா யானையானது குனியமுத்தூர், புட்டு விக்கி வழியாக மாநகர் பகுதியான செல்வபுரத்திற்குள் நுழைந்தது. அங்கிருந்து தெலுங்குபாளையம் நோக்கி நடந்த யானை செல்லும் வழியில் இருந்த தனியார் காம்பவுண்ட் சுவரை இடித்து தள்ளியது. இதனால் அங்குள்ள மக்கள் மிகவும் அச்சம் அடைந்தனர். வனத்துறையினர் யானை அருகே யாரையும் நெருங்க விடாமல் பாதுகாப்பாக நின்று கொண்டனர்.
யானை யாருக்கும் எந்தவித தொந்தரவும் கொடுக்காமல் நொய்யல் ஆற்றுப் பாதை வழியாக பேரூரை நோக்கி சென்றது. பின்னர் அந்த பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் நின்றது.
அங்கிருந்து நடந்து யானை நேராக, மருதமலை வனப்பகுதியை நோக்கி செல்ல வாய்ப்புள்ளது.வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்புக்காக பின்னால் செல்கின்றனர். அவர்கள் ஒலி பெருக்கி மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தபடியே செல்கிறார்கள். மக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருங்கள். யானையை புகைப்படம் எடுக்க வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் சிலர் தங்கள் வீடுகளில் இருந்தபடியும், சாலைகளில் வெகுதூரம் நின்றபடியும் யானையை தங்கள் செல்போனில் புகைப்படம், வீடியோ எடுத்தனர்.
அந்த காட்சிகளை தங்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதுவரை கிராமங்களுக்குள் சுற்றி திரிந்த யானை இன்று காலை முதல் நகர பகுதிகளில் சுற்றி திரிந்து வருகிறது. 75 பேர் கொண்ட வனத்துறை குழுவினரும் தொடர்ந்து யானையை பின் தொடர்ந்து வருகிறார்கள்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்ட மக்னா யானை தொடர்ந்து இடம் பெயர்ந்து கொண்டே இருக்கிறது. டாப்சிலிப்பில் இருந்து இன்று வரை மக்னா யானை 50 கிராமங்களை கடந்து 200 கி.மீ தூரம் பயணித்துள்ளது. யானை எங்கேயும் ஓய்வே எடுக்காமல் நடந்தபடியே உள்ளது. கடந்த 2 நாட்களாக யானை ஊருக்குள் சுற்றி திரிந்தாலும் இதுவரை எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. யானை நடந்து செல்லும் வழியில் உள்ள சுவர்களை மட்டுமே இடித்துள்ளது. மற்றபடி யாருக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்கவில்லை.
ஊருக்குள் சுற்றுவதால் யானையை வனத்தை நோக்கி மட்டுமே விரட்டி வருகிறோம். மற்றபடி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படி செய்தால் யானை மிரண்டு விடும். இதனால் அதிக பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதுவரை யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் திட்டம் எதுவும் இல்லை. வனப்பகுதிக்கு சென்ற பிறகே யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது குறித்து ஆலோசிக்கப்படும். தொடர்ந்து நாங்கள் யானையை கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதை அடுத்து மக்னா யானையை காட்டுக்குள் விரட்ட பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து கும்கி யானை சின்னத்தம்பி வரவழைக்கப்பட்டுள்ளது.
Leave a Reply