திருச்சி ஹோட்டல் விவகாரம்… சுற்றுலாத்துறையின் உத்தரவை ரத்து செய்தது மதுரை உயர்நீதிமன்றம்.!!

திருச்சி காஜாமலை பெரியார் கலை கல்லூரி அருகில் உள்ள எஸ்.ஆர்.எம் விடுதியின் குத்தகை காலம் முடிவடைந்த நிலையில், குத்தகை காலத்தை நீட்டிக்க முடியாது என்ற சுற்றுலா துறையின் உத்தரவு ரத்து செய்யவேண்டும் என்றும் குத்தகை காலத்தை நீட்டிக்க கோரியும் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இரு வழக்குகளும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்போது, தமிழக அரசின் சுற்றுலா துறையின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். திருச்சி காஜாமலை அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே தமிழக சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான இடத்தில், எஸ்.ஆர்.எம் (SRM) நட்சத்திர ஹோட்டல் 30 ஆண்டுகளுக்கு குத்தகை ஒப்பந்தம் போடப்பட்டு, ஆண்டுக்கு 75 லட்சம் ரூபாய் குத்தகை பணம் செலுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் இதனை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், குத்தகை ஒப்பந்தம் முடிவடைந்தாகவும், ஹோட்டலை காலி செய்யுமாறும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளனர். இது தமிழக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி செயல் என்று, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த விவகாரம் குறித்த தமிழக அரசின் அறிக்கையில், சம்மந்தப்பட்ட இடம் கடந்த 14.06.1994 அன்று முதல் 30 வருட காலத்திற்கு குத்தகை விடப்பட்டது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் எஸ்.ஆர்.எம். ஓட்டல் நிறுவனம் ஆகிய இரு தரப்பினரும் சம்மதித்து கையெழுத்திடப்பட்ட இந்த குத்தகை ஒப்பந்தமானது கடந்த 13-6-2024 அன்றுடன் முடிவடைந்து விட்டது.
30 ஆண்டு காலத்திற்கு குத்தகைத் தொகை ரூ.47,93,85,941/- என நிர்ணயம் செய்யப்பட்டது. இதில், நாளது தேதி வரை குத்தகைதாரர் எஸ்.ஆர்.எம். ஓட்டல் நிறுவனம் செலுத்திய தொகை ரூ.9,08,20,104/- மட்டுமே. மீதமுள்ள நிலுவைத் தொகையான ரூ.38,85,65,837/-ஐ குத்தகைதாரர் இதுவரை செலுத்தவே இல்லை. இவ்வாறு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தில் 30 ஆண்டுகளாக முழுமையான குத்தகை தொகையைச் செலுத்தாமல் எஸ்.ஆர்.எம். நிறுவனம் தனது ஹோட்டலை தொடர்ந்து நடத்தி வந்துள்ளது.
குத்தகை ஒப்பந்தத்தில் 30 வருட காலத்திற்கு மட்டும் தான் குத்தகைக்கு விடப்படுகிறது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குத்தகைக் காலத்தை மேலும் நீட்டிக்க ஒப்பந்தக்காரர் கோரக் கூடாது என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மை நிலை இவ்வாறு இருக்க, சில ஊடகங்களில் எஸ்.ஆர்.எம். ஹோட்டல் சார்பாக தவறான மற்றும் உண்மைக்கு மாறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
குத்தகைக் காலம் முடிவடைந்ததாலும், குத்தகைதாரர் முறையாக, முழுமையான குத்தகைத் தொகையைச் செலுத்தாததாலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அரசாணை மற்றும் ஒப்பந்தத்தின்படிதான் முறையான நடவடிக்கையை எடுத்துள்ளது என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது