சிற்பிக்குள் முத்துப்போல… பாறைக்குள் பாடகர் எஸ்.பி.பியின் முகம்… எங்கே இருக்குனு தெரியணுமா.!!

புதுச்சேரி: 6 டன் எடையுள்ள பாறையை குடைந்து மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த 2020-ல் காலமானார். காஞ்சிபுரம் அருகில் உள்ள தாமரைப்பாக்கம் சர்வேஸ்வரா நகரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கு எஸ்.பி.பிக்கு நினைவு இல்லத்தை, அவரது மகன் எஸ்.பி.பி.சரண் உருவாக்கி வருகிறார் ஓராண்டாக நடக்கும் இப்பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது.

இங்கு அமையும் சிலைகள், புதுச்சேரி அடுத்துள்ள ஆரோவில் சஞ்சீவி நகர் பகுதியில் உள்ள சிற்பக்கூடத்தில் உருவாகியுள்ளன. இதுபற்றி சிற்பக்கூடத்தினர் கூறுகையில், “தாமரைப்பாக்கத்தில் எஸ்.பி.பி நினைவு இல்லத்தில் ஓராண்டாக பணி நடந்து வருகிறது. அங்கு சில சிலைகளை வடிவமைத்துள்ளோம். அந்த அழகிய வடிவமைப்பின் ஒரு பகுதியாக, ஒரு பாறையை குடைந்து எஸ்.பி.பி முகத்தை வடிவமைக்க திட்டமிட்டோம்.

இதற்காக 6 டன் எடைக் கொண்ட பாறை திருவக்கரையில் இருந்து பெறப்பட்டது. 6 மாதங்களாக இதற்கான பணி நடந்து, அழகிய உருவம் வரப்பெற்றுள்ளது. அவரது உருவத்தின் அருகில் அவரது கையெழுத்து, அவர் அடிக்கடி உச்சரிக்கும், ‘சர்வே ஜனாஸ்ஸு; ஜனா பவந்து; ஸர்வேசு ஜனா சுகினோ பவன்’ என்ற மந்திரத்தையும் செதுக்கியிருக்கிறோம்.

சிற்பி கருணாகரன் குமார் தலைமையில் 6 சிற்பிகள் இதை வடிவமைத்துள்ளனர். இப்பணிகள் முடிவடைந்து நேற்று மாலையில் இந்த அழகிய கலை வடிவத்தை, கிரேன் மூலம் வாகனத்தில் ஏற்றி, தாமரைப்பாக்கம் அனுப்பினோம். அங்கு பொருத்தும் பணிகள் நடக்கும்” என்று தெரிவித்தனர்.

‘அனைவரும் மகிழ்ச்சியாக நோயின்றி ஆரோக்கியமாக இருக்க வேண்டும்; அனைவருக்கும் சுபம் விளைய வேண்டும்; ஒருவர் கூட துயரம் அடையக்கூடாது’ என்பதே எஸ்.பி.பி. அடிக்கடி உச்சரிக்கும் சமஸ்கிருத சொல்லின் அர்த்தமாகும். இந்த வார்த்தை இந்த உருவத்தோடு செதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.