செம்மொழி பூங்கா பணிகள் அனைத்தும் சிறப்பாக நடக்கிறது : 25 ஆம் தேதி காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் – இறுதி கட்டப் பணிகளை பார்வையிட்ட பின் அமைச்சர் கே. என். நேரு தகவல்.
கோவை, காந்திபுரத்தில் மத்திய சிறைச்சாலை வளாகத்தில், செம்மொழி பூங்கா கோவை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் மூலிகை தோட்டங்கள், நீரூற்றுக்கள், மலை குன்றுகள், உணவகங்கள், படிப்பகங்கள், குழந்தைகள், சிறுவர்கள் விளையாடும் பகுதிகள், என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கட்டப்பட்டு வருகிறது.
இதன் திறப்பு விழா மற்றும் ஏற்பாடுகள் குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார். அப்போது அவருடன் தி.மு.க மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாவட்ட ஆட்சியர் பவன் குமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் அதிகாரிகளும் உடன் சென்றனர்.
செம்மொழி பூங்கா பணிகள் நடைபெற்று வரும் ஒவ்வொரு பகுதியாக சென்று அமைச்சர் கே. என். நேரு ஆய்வு செய்தார்.
அப்போது அவரிடம் அதிகாரிகள் ஒவ்வொரு பணிகளாக விளக்கிக் கூறினர். அவர்களிடம் பணிகளை விரைவாகவும் சிறப்பாகவும் செய்து முடிக்கும்படி அமைச்சர் கே. என் நேரு உத்தரவிட்டார்.அதன் பிறகு அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது.
செம்மொழி பூங்கா இறுதி கட்டப் பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து பணிகளும் குறிப்பிட்ட தேதிக்குள் செய்து முடிக்கப்படும்.பூங்காவை வருகிற 25 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்க உள்ளார். அதன் பிறகு முக்கிய தொழில் அதிபர்கள், மருத்துவர்கள், என மக்களுக்கு பணியாற்றுபவர்கள் என 150 பேரை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாட உள்ளார். மேலும், செம்மொழி பூங்காவில் உள்ள மூலிகை தோட்டங்கள் உள்பட அனைத்து பகுதிகளையும் பார்வையிடுகிறார்.
மேலும் பூங்காவை திறந்து வைத்ததும் பள்ளி மாணவ – மாணவிகள் மத்தியில் அவர் கலந்துரையாடுகிறார்
பூங்கா 45 ஏக்கரில் அமைக்கப்பட்டு உள்ளது. முதலமைச்சர் திறந்து வைத்ததும் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி அளிக்கப்படும். டிசம்பர் 1 ந்தேதி முதல் அனுமதிக்கலாம். மழை பெய்தாலும் திட்டமிட்டபடி குறிப்பிட்ட தேதியில் பூங்கா திறக்கப்படும்.பூங்கா பணிகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. அதை நிறைவேற்றுவதற்காக தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர் செய்து வருகிறார். திறப்பு விழாவிற்காக அவசர அவசரமாக பணிகள் நடைபெறவில்லை.அனைத்தும் சிறப்பாக நடைபெறுகிறது. மெதுவாக வேலை செய்தால் மெதுவாக வேலை செய்கிறீர்கள் என்கிறீர்கள். வேகமாக வேலை நடந்தால் ஏன் ? வேகமாக வேலை நடக்கிறது என்று. கேட்கிறீர்கள். பூங்காவை பராமரிப்பது நிர்வாகிப்பது குறித்து ஏற்கனவே அறிவித்தபடி பணிகள் செய்யப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, துணைமேயர் வெற்றிச்செல்வன், திமுக மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி, திமுக தீர்மானக்குழு செயலாளர் நா.கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.









