அறிவியல் மையம் மூலம் மாணவர்களின் அறிவுத்திறன் மேம்படும் – பழனிவேல் தியாகராஜன் பேச்சு

கோவை ஜி.டி.நாயுடு அறக்கட்டளை சார்பில்”எக்ஸ்பி ரிமெண்டா” என்ற புதிய அறிவியல் மையம் திறப்பு விழா இன்று நடந்தது. விழாவுக்கு ஜிடி நாயுடு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஜி .டி. கோபால் தலைமை தாங்கினார். அறிவியல் மையத்தை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் பேசியதாவது: -நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் மூலதான உற்பத்தி, நிர்வாக திறன் போன்றவைகள் தமிழகத்தில் சிறப்பாக உள்ளன. அறிவியல் ரீதியாகவும் தமிழகம் வளர்ச்சியடைந்து வருகிறது. தமிழக முதல் அமைச்சரின் நான் முதல்வன் என்ற மாணவர்களுக்கான திட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. கோவை எப்போதுமே தனிச்சிறப்பு கொண்டது. தொழில்ரீதியான முன்னேற்றம், ராணுவ தளவாடங்கள் உற்பத்தி, தொழிற்நிறுவனங்களின் தேவைகள் அனைத்தும் நிறைந்த இடம் என கோவைக்கு பல சிறப்புகள் உள்ளன.
தற்போது அறிவியல் ரீதியாகவும் கோவை சிறப்புமிக்கதாக மாறியுள்ளது. ‘எக்ஸ்பிரிமெண்டா’ அறிவியல் மையம் மூலம் மாணவர்களின் அறிவியல் திறன் மேம்படும். அறிவியல் வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவும். வருங்காலங்களில் அறிவியல் வளர்ச்சி இம்மையம் புதிய உத்வேகம் அளிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், கவுரவ விருந்தினராக சென்னை, ஜெர்மன் தூதரக அதிகாரி மைக்கேலா குச்லேர். மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், கோவை பாரதீய வித்யா பவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.
ஜி.டி நாயுடு அறக்கட்டளை அறங்காவலர்கள் ஜி.டி. ராஜ்குமார், அகிலா, சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவிற்கு கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கி அதை செயல்படுத்துவது தமிழகத்தில் மட்டும் தான். அந்த அளவுக்கு கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. நான் முதல்வன் திட்டம் மூலம் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் புரிதல் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் அடுத்து என்ன செய்யலாம் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
இந்தியா, ஜெர்மனி இடையே வர்த்தக உறவு அதிகம் உள்ளது. என்ஜினீயரிங் துறையில் ஜெர்மனி உலகத்துக்கே வழிகாட்டியாக உள்ளது. அவ்வாறு ஜெர்மனியில் செயல்படுத்தக்கூடிய அதன் சிறப்பு திட்டங்கள், பயிற்சிகள் கோவையில் உள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலிருந்து ஜெர்மனிக்கு வேலை நிமித்தமாகவும், படிப்பதற்காக வரும் அதிக நபர்கள் செல்கின்றனர். அந்த அளவுக்கு ஒரு நல்ல நட்பு நிலை உள்ளது.தற்போது கிராஸ் சர்டிபிகேசன் என்று சொல்லக்கூடிய சான்றிதழ் இங்கே படிக்கும் மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது படித்தால் ஜெர்மனிக்கு நேரடியாக சென்று வேலைவாய்ப்பை பெறலாம். ஜெர்மனியில் படிப்பு ரீதியாக எந்த ஒரு சான்றிதழும் பெற வேண்டியது இல்லை. இதுபோன்று பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஜி.எஸ்.டி. பொறுத்தவரை தமிழகத்திற்கு 4 ஆயிரம் கோடிக்கு மேலாக ஒன்றிய அரசிடமிருந்து வர வேண்டி உள்ளது. மார்ச் மாதத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதியானது 2020 -21 -க்கான நிதி ஆகும். இது தவிர மேலும் ரூ.3000 கோடிக்கு மேலாக ஜி.எஸ்.டி. வரவேண்டியது உள்ளது. மாதம் மாதம் வர வேண்டிய ஜி.எஸ்.டி. தொகையும் தாமதம் ஏற்படுகிறது. ஜி.எஸ்.டி. மாடலில் மாறுதல் தேவை. ஒன்றிய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு வரக்கூடிய வழிமுறைகளை மிகவும் எளிதாக மாற்ற வேண்டும் மதுரையில் நடக்கக்கூடிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் இது குறித்து எடுத்துரைக்கப்படும் பட்ஜெட்டை பொருத்தவரை முதல்வரின் உத்தரவுபடி திட்டங்கள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். கல்விக்கடன் தள்ளுபடி குறித்து முதல்-அமைச்சர் விரைவில் அறிவிப்பார். மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக முதல்-அமைச்சர் என்ன சொன்னாரோ அது நடக்கும். தமிழகத்தின் நிதியை பொருத்தவரையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக சரிவை சந்தித்தது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து கடந்த ஒன்றரை ஆண்டு காலத்திலேயே நிதி பற்றாக்குறை குறைந்து வருகிறது. வருவாய் அதிகரித்துள்ளது கடன் வாங்குவது குறைக்கப்பட்டுள்ளது.
தொழில் அதிபர் அதானி பங்குகள் சரிந்து வருகின்றன. இது குறித்து நான் ஒரு நிதி அமைச்சராக பேசவில்லை, பங்குச்சந்தைகளில் பணிபுரிந்த அனுபவத்தில் பேசுகிறேன். இத்தனை ஆண்டு காலமாக பங்குச்சந்தையில் அதானி பங்குகள் குறித்து ஏற்பட்டுள்ள குளறுபடிகள் தொடர்பாக தொடர்பாக ஆர்.பி.ஐ., செபி போன்ற அமைப்புகள் நடவடிக்கை எடுக்காதது ஏன் தற்போது தான் அதானி பங்குகள் குறித்த விவாதம் நடைபெறுகிறது என்பது இல்லை. பல ஆண்டுகளாகவே இந்த விவாதம் நடந்து வருகிறது. பாராளுமன்றத்தில் கூட குரல் எழுப்பப்பட்டுள்ளது. ஆனால் இந்த விவகாரம் தற்போது தான் பூதாகரமாக எழுந்துள்ளது. ஒன்றிய அரசு இதற்கு பதில் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.