ஜூன் 23-ம் தேதி சென்னை வானகரம், ஶ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு களேபரத்துடன் முடிந்தது.
இதையடுத்து, ஜூலை 11-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் இல்லாமல் அதே மண்டபத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வத்தையும் அவரின் ஆதரவாளர்களையும் அதிமுக-விலிருந்து நீக்கி சிறப்பு தீர்மானங்களைக் கொண்டுவந்தார் இ.பி.எஸ். இதனால், அதிமுக யார் கையில் என்ற குழப்பத்திலேயே தொண்டர்கள் இருக்கின்றனர்.
இந்தச் சூழலில், அமமுக பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவதற்கான அறிவிப்பை டி.டி.வி.தினகரன் வெளியிட்டார். அதன்படி, அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடந்த அதே வானகரம் ஶ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நேற்று பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார் டி.டி.வி.தினகரன்.
அதிமுக-வுக்குள் நடக்கும் களேபரங்களைத் தனக்குச் சாதகமாக்கி பொதுக்குழுவை எப்படி நடத்தப்போகிறார் என்ற கேள்வியோடு அமமுக பொதுக்குழு நடந்த மண்டபத்துக்கு லைவ் விசிட் அடித்தோம். வானகரம் உட்புற சாலையில் மண்டபம் நோக்கிச் செல்லும் இருபுறங்களிலும் தினகரனை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணி முதல் பொதுக்குழு உறுப்பினர்கள் மண்டபத்தை நோக்கி வரத் தொடங்கினர். மண்டபத்தின் நுழைவு வாயிலில் வாழை இலை, தென்னை இலைத் தோரணம் நம்மை வரவேற்க… டி.டி.வி.தினகரனுக்குப் பின்னால் நாடாளுமன்றம் இருப்பது போன்ற வாயில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்தது.
பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வதற்கு ஒரு பாதையும், மற்ற நிர்வாகிகளும், தொண்டர்களும் செல்வதற்கு ஒரு பாதையும் அமைக்கப்பட்டிருந்தது. மாவட்டவாரியாக பொதுக்குழு நிர்வாகிகள் தங்களின் விவரங்களைப் பதிவுசெய்ய அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், பொதுக்குழு உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகளுக்குத் தனித்தனி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. மண்டபத்தில் உட்கார இடம் இல்லாமல் பொதுக்குழு உறுப்பினர்கள் மண்டபத்துக்கு உள்ளேயும், வெளியேயும் திரண்டிருந்தனர்.
இதையடுத்து, சரியாக 9 மணிக்கு தினகரன் பொதுக்குழுவுக்கு வந்தார். அவருக்கு டிரம்ஸ் மேளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்களைத் தவிர தொண்டர்கள் அமரும் வகையில் தனியாக ஓர் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. பொதுக்குழு ஏற்பாடுகள் இவ்வாறு இருக்க ஏதோ `மிஸ்’ ஆகிறதே என்று தேட ஆரம்பித்தோம். அப்போதுதான், பேனர்கள் மற்றும் பொதுக்குழு மேடையில் சசிகலாவின் புகைப்படங்கள் முழுவதுமாகப் புறக்கணிக்கப்பட்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, டி.டி.வி.தினகரனின் படங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தைக் காண முடிந்தது.
பொதுக்குழு மேடையில், `கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் உண்மைத் தொண்டர்களாகத் தொடர்ந்து பயணிக்க உறுதி, பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வைக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல், திமுக அரசின் சொத்து வரி, மின்கட்டண உயர்வுக்குக் கடும் கண்டனம், கழகப் பொதுச்செயலாளர், தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிக்கான தேர்தலை நடத்துவது’ ஆகிய 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்துவது குறித்த தீர்மானம் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. கடந்த ஆண்டு, பிப்ரவரி மாதம் ஆன்லைனில் பொதுக்குழுக் கூட்டத்தை டி.டி.வி.தினகரன் நடத்தினார். அப்போது, ‘சசிகலாவுக்காக அமமுக தலைவர் பதவி காலியாக இருக்கிறது’ என்று கூறினார். ஆனால், இந்த முறை பொதுக்குழுக் கூட்டத்தில் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்துவது குறித்து கொண்டுவரப்பட்ட தீர்மானம் பல கேள்விகளை எழுப்பியது.
இது குறித்து, அமமுக மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “சசிகலாவுக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த தலைவர் பதவி கடந்த நான்கு ஆண்டுகளாக காலியாகவே இருந்தது. இதனால், துணைத் தலைவர் அன்பழகன், தலைவர் பதவியையும் சேர்த்து கவனித்துவந்தார். அதிமுக-வைக் கைப்பற்ற சசிகலா நீதிமன்றத்தின் மூலம் முயற்சி மேற்கொண்டுவருவதால், அமமுக தலைவர் பதவிக்குக் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரையே தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் தான் தற்போது தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்தப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சசிகலாவும் அமமுக தலைவர் பதவியைப் பெரிதும் விரும்பவில்லை. இதனாலேயே பேனர்களில்கூட சசிகலாவின் படங்கள் இடம்பெறவில்லை” என்றனர்.
இதேபோல், பொதுக்குழுவில் கடைசியாகப் பேசிய தினகரன், “திருச்சி மாநகரில் அடுத்த பொதுக்குழுவை மிகப்பெரிய மாநாடுபோல் நடத்துவோம். ஆர்.கே.நகர் தேர்தலைத் தவிர்த்து நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் நம்மால் வெற்றிபெற முடியவில்லை. நமது இயக்கத்தைக் கண்டு ஏளனமாகப் பேசினார்கள். கோடிக்கணக்கில், லட்சக்கணக்கில் விலை பேசப்பட்டவர்கள் அமமுக-வில் பொறுப்பாளர்களாக இருக்கிறார்கள். ஆனால், எப்போதும் அவர்கள் விலைபோனது இல்லை. வருங்காலத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அம்மாவின் ஆட்சியை உருவாக்கியிருக்கிறது என்ற பெயரை எடுக்கப்போகிறோம்” என்று பேசிக்கொண்டிருந்தார்.
அவர் பேசும்போதே, பல நிர்வாகிகளும், தொண்டர்களும் வெளியே சென்றார்கள். அவர்களைப் பின்தொடர்ந்து சென்று பார்த்தபோது, `கம கம…’ பிரியாணி சாப்பிட ஓடிப்போய் இடம்பிடித்துக்கொண்டிருந்தார்கள் என்பது தெரிந்தது. இவ்வாறாக முடிந்தது அமமுக பொதுக்குழு.
எது எப்படியோ… “களேபரமாக நடந்த அதிமுக பொதுக்குழுவுக்குச் சவால்விடும் வகையில் கட்டுக்கோப்புடன் ஒரு பொதுக்குழுக் கூட்டத்தை டி.டி.வி.தினகரன் நடத்தியிருக்கிறார்” என்கின்றனர் அதிமுக-வினர்.
Leave a Reply