ஜெயலலிதா பிறந்தநாள்-இபிஎஸ் மரியாதை.!

சென்னை: தமிழக அரசியலின் ஒரு சகாப்தமாகத் திகழ்ந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்களால் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது..

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் இன்று காலை முதலே விழாக்கோலம் பூண்டுள்ளது.. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த விழாவானது, வரவிருக்கும் தேர்தல் களத்திற்கான ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தின் பெண் சிங்கமாகத் திகழ்ந்தவர்.. ஒரு சாதாரணப் பெண்ணாக அரசியலில் நுழைந்து, பல சவால்களையும் துரோகங்களையும் முறியடித்து, ஒரு மாபெரும் இயக்கத்தைக் கட்டுக்கோப்பாக வழிநடத்திய அவரது ஆளுமை இந்திய அரசியலில் வியந்து பார்க்கப்படுகிறது..ஏழை எளிய மக்களுக்காக அவர் கொண்டு வந்த தொட்டில் குழந்தைத் திட்டம், அம்மா உணவகம் மற்றும் ஏழைப் பெண்களுக்குத் தாலிக்குத் தங்கம் போன்ற திட்டங்கள் இன்றும் அவரது பெயரைத் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் உச்சரிக்கச் செய்து கொண்டிருக்கின்றன.. எத்தகைய நெருக்கடி வந்தாலும் தன் கொள்கையில் உறுதியாக இருந்து, தமிழகத்தின் உரிமைகளுக்காக டெல்லி வரை சென்று முழக்கமிட்ட அவரது துணிச்சல், அவரை ஒரு பெண் சக்தியின் வடிவமாக உலகிற்குப் பறைசாற்றியது.. இன்று காலை 10.30 மணி அளவில் கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தும் எடப்பாடி பழனிசாமி, அங்கேயே கட்சியின் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்குகிறார்..இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக-வினருக்கு எழுதி இருக்கும் கடிதத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நம் உள்ளங்களிலும், தமிழக மக்களின் நெஞ்சங்களிலும் என்றென்றும் நீக்கமறநிறைந்திருக்கிறார். அவரது பொற்கால ஆட்சியில், பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையிலும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் எனது தலைமையிலான அதிமுக ஆட்சிக் காலத்திலும் மக்கள் நலன் சார்ந்து நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் ஏராளம், ஏராளம். ஜெயலலிதாவுக்குப் பிறகு, நம் இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு அதிமுக தொடர்ந்து மக்கள் பணிகளை தொய்வில்லாமல் ஆற்றி வருகின்றது.பெண் கல்வி, பெண் விடுதலை,பெண்களுக்கு சம உரிமை, பெண்களின் பாதுகாப்பு, பெண்களுக்கான சமூகப் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் தனிக் கவனம் செலுத்திய ஜெயலலிதா, பெண்களுக்காகவும், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் கொண்டு வந்த அற்புதமான திட்டங்களை எல்லாம் இந்த திமுக அரசு சீர்குலைத்து நிறுத்திவிட்டது.நாடாளுமன்ற இரு அவைகளிலும் மிகப் பெரிய எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்டதாக இருந்தாலும், இந்த திமுக அரசு தமிழக உரிமைகளைக் காப்பாற்றவும், இருமொழிக் கொள்கையை நிலைநாட்டிடவும், திறனற்ற அரசாக இருந்துகொண்டிருக்கிறது. இந்த அலங்கோல ஆட்சியில் நாள்தோறும் தமிழகத்தில் பெண்குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் பெண் காவலர்களுக்கும்கூட பாதுகாப்பற்ற நிலையே நிலவுகிறது.இந்த அவலங்களை எல்லாம் மாற்ற வேண்டும். தமிழகம் அமைதிப் பூங்காவாய் திகழ வேண்டும், தமிழகம் பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் அதிமுக ஆட்சி மீண்டும் மலர வேண்டும். தமிழக வாக்காளர்கள் ஒவ்வொருவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். “எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், அதிமுக மக்களுக்காகவே இயங்கும்” என்று ஜெயலலிதா சூளுரைத்தார்.அந்த வெற்றி முழக்கத்தை, செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள்தான் இன்று (பிப்.24) நாம் கொண்டாடும் ஜெயலலிதாவின் பிறந்தநாள். அவரது பிறந்தநாளை கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் எழுச்சியுடன் கொண்டாட வேண்டும். அந்த எழுச்சி, வரும் 2026 தேர்தல் வெற்றியை பிரதிபலிக்கும் வகையில் அமைய வேண்டும்.

அதிமுக அரசின் சாதனைகளையெல்லாம், தங்களது சாதனைகளாகக் கருதி பொய்ப் பிரச்சாரம் செய்து வரும் திமுக-வினரின் பிரச்சாரங்களை முறியடிக்கும் வகையில், அதிமுக தலைமையிலான பொற்கால ஆட்சியில் செய்த சாதனைகளை எடுத்துக் கூறி, தேர்தல் களத்திலே மாபெரும் வெற்றியைப் பெறுவதற்கு அயராது உழைப்போம் என வீரசபதம் ஏற்போம்” என்று தெரிவித்துள்ளார்.