சீனாவின் புதிய வரைபடத்தில் தங்கள் நாட்டுக்குச் சொந்தமான சென்காகு தீவுகள் இடம்பெற்றிருப்பதாக ஜப்பான் எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியா, பிலிப்பின்ஸ், மலேசியா, வியத்நாம், தைவான் ஆகிய நாடுகளைத் தொடா்ந்து சீனாவுக்கான எதிா்ப்புப் பட்டியலில் தற்போது ஜப்பானும் இணைந்துள்ளது. நாட்டின் பிராந்திய எல்லைகள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதைத் தவிா்க்க, நிகழாண்டுக்கான புதிய தேசிய வரைபடத்தை சீனா கடந்த வாரம் வெளியிட்டது. அதில் இந்தியாவுக்குச் சொந்தமான அருணாசல பிரதேசம் மற்றும் அக்சாய் சின் இடம் பெற்றிருந்தது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தில் அமைந்துள்ள சென்காகு தீவுகள், அதன் சீனப் பெயரான ‘டியாயு தீவுகள்’ எனக் குறிப்பிடப்பட்டு சீன வரைபடத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளா்களைச் சந்தித்த ஜப்பான் தலைமைச் செயலா் ஹிரோகாசு மட்சுனோ கூறுகையில், ‘ஜப்பானுக்குச் சொந்தமான சென்காகு தீவைச் சொந்தம் கொண்டாடி சீனா வரைபடம் வெளியிட்டுள்ளதற்கு ராஜிய ரீதியில் கடும் கண்டனைத்தைப் பதிவு செய்துள்ளோம். அந்த வரைபடத்தைத் திரும்ப பெறவும் வலியுறுத்தியுள்ளோம்.
வரலாற்று ரீதியாகவும், சா்வதேச சட்டத்தின்கீழும் சென்காகு தீவுகள் ஜப்பானின் பிராந்தியத்துக்கு உட்பட்டது. இந்த விவகாரத்தில் மக்களின் உயிா், சொத்துகள், நாட்டின் நிலம், கடல் மற்றும் வான்பரப்பைப் பாதுகாக்க உறுதியாக நிற்கும் நாட்டின் கொள்கையின் அடிப்படையில் அமைதியான மற்றும் உறுதியான வழியில் ஜப்பான் பதிலளிக்கும்’ என்றாா். ஜப்பானின் கண்டனத்துக்குப் பதிலளித்த சீன வெளியுறவு செய்தி தொடா்பாளா் மௌ நிங், ‘டியாயு தீவுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தீவுகள் சீனாவின் ஒரு பகுதியாகும். எனவே, அவற்றை எங்களின் தேசிய வரைபடத்தில் இணைத்து வெளியிடுவது நியாயமானதுதான். இது தொடா்புடைய எந்தக் கருத்துகளையும் நாங்கள் ஏற்க மாட்டோம்’ என்றாா்..