சென்னை: சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா எங்களை அழைக்காதது வருத்தம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட ஓபிஎஸ், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் அமித்ஷா சென்னை வந்த போது எங்களை அழைத்து பேசாதது வருத்தமே என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து ஓபிஎஸ் மேலும் பேசியதாவது: நாங்கள் கடந்த லோக்சபா தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்துதான் சந்தித்தோம். தற்போதும் அதே கூட்டணியிலேயே நீடிக்கிறோம். யார் விரும்புகிறார்களோ இல்லையோ எங்களின் நிலைப்பாடு இதுதான்.
மாவட்டக் கழக நிர்வாகிகளை ஆலோசித்து இந்த முடிவு எடுத்திருக்கிறோம். அடுத்ததாக மாவட்டம் மாவட்டமாக தொண்டர்களை சந்திக்கவுள்ளோம். மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்த போது எங்களை அழைக்காதது வருத்தமே. அதிமுகவை ஜெயலலிதா உச்சாணிக் கொம்பில் வைத்துவிட்டுச் சென்றார்.
ஆனால் இப்போது நிலைமை எப்படி இருக்கிறது என தெரியும். ஆகவே பிரிந்திருக்கும் அதிமுகவினர் ஒன்றுபட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் 9 கட்சிகளும் இணைந்தே எந்த முடிவையும் எடுக்க வேண்டும்.
எடப்பாடியை தவிர என்னுடன் என்டிஏவில் இருக்கும் அத்தனை தலைவர்களும் என்னுடன் பேசிக் கொண்டேதான் இருக்கிறார்கள். விஜய் கட்சி ஆரம்பித்தபோதே நான் வாழ்த்தினேன். அவரின் அரசியலைப் பொறுத்தே அவர் எந்தத் திசையில் செல்கிறார் என்பதை சொல்ல முடியும். இதுவரை நல்ல திசையிலேயே செல்கிறார்.
அரசு நிர்வாகத்தில் திமுக தோல்வி அடைந்துவிட்டது. இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்தார். வரும் 2025 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு தற்போதே கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. இந்த முறை புதிதாக கட்சி தொடங்கிய விஜய்யும் 2026 ஆம் ஆண்டு தேர்தலை நோக்கி பயணிக்கிறார்.
பாஜகவுடன் கூட்டணி கிடையாது என கூறி வந்த எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி வைத்தார். கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி சென்னையில் அதிமுக-பாஜக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அமித்ஷா அறிவித்தார்.
பாஜகவுடன் ஏற்கெனவே டிடிவி தினகரனும் ஓபிஎஸ்ஸும் கூட்டணியில் உள்ளனர். இதனால் இவர்கள் இருக்கும் கூட்டணியில் எடப்பாடி எப்படி சென்றார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் ஓபிஎஸ்ஸையும் டிடிவி தினகரனையும் அதிமுகவில் இணைக்க எடப்பாடி பழனிசாமி மறுத்து வருகிறார்.
இந்த நிலையில்தான் சட்டசபை தேர்தலுக்கு எப்படி தயாராவது என்பது குறித்து ஆலோசிக்க அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று சென்னை ராயப்பேட்டையில் தொடங்கியது. அந்த கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த, மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அப்போது, 2026 சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த கருத்து கேட்புக்கான கடிதம் வழங்கப்பட்டு பெறப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு பின்னர் வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறும்போது, அதிமுக – பாஜக இணைந்து அமைத்துள்ள என்டிஏ கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது. நிர்வாகிகளுடைய கருத்துக்கள் கேட்கப்படுகின்றன. நாளை (இன்று) இது பற்றி முடிவு எடுக்கப்படும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்கிறோமோ என்பதை நாளை (இன்று) செய்தியாளர்களைச் சந்தித்து ஓபிஎஸ் விளக்கம் கொடுப்பார்” என்று கூறியிருந்தார். அந்த வகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், தாங்கள் என்டிஏ கூட்டணியில் இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தினார்.