சென்னை: எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான கான்ட்ராக்டர் முருகப்பெருமாளின் வீடு, அலுவலகம் உள்பட 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சோதனையில் பல நூறு கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் எடப்பாடி மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடிக்கு கான்ட்ராக்ட் எடுத்திருப்பது தெரியவந்தது. சென்னை, சிங்கப்பெருமாள் கோவில், கூவத்தூர் மற்றும் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் தனியார் கட்டுமான நிறுவனங்களின் அதிபர்கள், ஒப்பந்ததாரர்கள் அலுவலகங்கள், வீடுகள் என ஒரே நேரத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரி துறையினர் இன்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ளது கோசுகுறிச்சி. இந்த ஊரை சேர்ந்தவர் ராமு. இவரது மகன்கள் முருகப்பெருமாள், சரவணப் பெருமாள்.
இவர்கள், ஆர்.ஆர்.இன்ப்ரா கன்ட்ஸ்ட்ரக்சன் என்ற பெயரில் கம்பெனி நடத்தி வந்தனர். ஆரம்பத்தில் இவர்கள் சிறிய அளவில் கான்ட்ராக்ட் எடுத்து நடத்தி வந்தனர்.கடந்த ஜெயலலிதா ஆட்சியின்போது பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியின் நட்பு கிடைத்தது. அதன்பின்னர் இவர்கள் மள, மள வென பெரிய, பெரிய ரோடு கான்ட்ராக்ட் பணிகளை எடுத்து நடத்தத் தொடங்கினர். பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானவுடன் ஏராளமான பணிகள் இவர்களின் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமியின் நண்பர் செய்யாத்துரையை விட அதிகமான கான்ட்ராக்ட் இவர்களுக்குத்தான் வழங்கப்பட்டது.
அதில் தஞ்சாவூர், பழனி, திண்டுக்கல் ஆகிய நெடுஞ்சாலை மண்டலங்களின் பராமரிப்பு மற்றும் ரோடு கான்ட்ராக்ட் பணிகள் முழுமையாக இவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த 3 மண்டலங்களில் இருந்து மட்டும் 2 ஆயிரம் கோடிக்கு கான்ட்ராக்ட் வழங்கப்பட்டது. அதைத் தவிர செங்கல்பட்டு முதல் காஞ்சிபுரம் வரையிலான 448.645 கோடிக்கு சாலை அமைக்கும் பணியையும் இந்த நிறுவனம் பெற்றுள்ளது.இதைத் தவிர திருப்போரூர் முதல் மகாபலிபுரம் வரையிலான பழைய மகாபலிபுரம் சாலை பணிகளும் இவர்களுக்கு வழங்கப்பட்டது. அதைத் தவிர சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரோடு பணிகள், சேலம் மற்றும் கோவையில் உள்ள அனைத்து மேம்பாலம் மற்றும் பால பணிகள் இந்த ஆர்.ஆர். இன்ப்ரா கன்ட்ஸ்ட்ரக்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2011 முதல் 2021 வரை சுமார் 10 ஆயிரம் கோடிக்கு நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை மூலம் கான்ட்ராக்ட் வழங்கப்பட்டது.
இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமாக மட்டுமல்லாமல் மனச்சாட்சியான நிறுவனமாகவும் இது செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்துக்கு மதுரை, திண்டுக்கல், தஞ்சை, சென்னை, செங்கல்பட்டு, சேலம், கோவை ஆகிய இடங்களிலும் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.இதைத்தவிர நத்தம், துவரங்குறிச்சி பகுதிகளில் நெடுஞ்சாலை பணிகளை மேற்கொண்டு வருகிறது. தவிர, மதுரையில் அண்ணாநகர், அவனியாபுரம், சிலைமான் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களிலும் வெவ்வேறு நிறுவனங்கள் பெயர்களில் தனி வீடுகளை கட்டி விற்பனை செய்து வருகின்றனர். மேலும் இந்த குடியிருப்பு வீடுகள் பராமரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த குடியிருப்பு வீடுகள் கட்ட கட்டுமானப் பொருட்கள் வாங்கியது, விற்பனை நடத்தியது உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் வரி ஏய்ப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக புகார்கள் எழுந்தன.
ஆனால் இந்த நிறுவனம் வருமான வரித்துறைக்கு முறையான கணக்கு காட்டாமல் முறைகேட்டில் ஈடுபட்டு வந்ததாக புகார்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையை நடத்தி வருகின்றனர். இந்தச் சோதனையில் பல நூறு கோடிக்கு வரி ஏய்ப்பு மற்றும் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் இந்த சோதனை இரவு வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2021 தேர்தல் செலவை கவனித்த நிறுவனம்சேலம், கோவையின் பாலங்கள் பணிகள் முழுமையாக ஆர்.ஆர்.இன்ப்ரா கன்ட்ஸ்ட்ரக்சனுக்கு வழங்கப்பட்டுள்ளதால், 2021ம் ஆண்டு தேர்தல் செலவு முழுமையாக இந்த நிறுவனமே செய்துள்ளது.
இதற்காக சேலத்தில் அலுவலகம் அமைத்து பணிகளை செய்துள்ளனர். இவர்கள்தான் தமிழகம் முழுவதும் பணத்தை கொண்டு சென்று விநியோகம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இவர்களிடம் இருந்து ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளன. ஏற்கனவே, எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பரும் கான்ட்ராக்டருமான செய்யாத்துரை வீடு, அலுவலகத்தில் சோதனை நடந்தது. தற்போது முருகப்பெருமாள் வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசு எடப்பாடி பழனிச்சாமியை சுற்றி வளைத்து தாக்குதலை தொடங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply