ஆம்புலன்ஸ் வாகனம் வரும்போது சிக்னலில் எச்சரிக்கும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்.!!

சென்னை: ஆம்புலன்ஸ் வரும்போது சிக்னலில் எச்சரிக்கை செய்யும் புதிய தொழில்நுட்பம் இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அவசர மருத்துவ உதவி தேவைப்படுவோர் மற்றும் சாலை விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உடனடி சிகிச்சை அளித்தால் அவர்கள் உயிர் பிழைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதேநேரம், நெரிசல் மிகுந்த சென்னையில் வாகனங்களுக்கு இடையேஆம்புலன்ஸ் புகுந்து செல்வதில் பல்வேறு இடையூறுகள் உள்ளன.

இதைப் போக்கும் வகையில் சென்னை போக்குவரத்து போலீஸார், 3 தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து ‘எம்சைரன் ஸ்மார்ட் ஆம்புலன்ஸ்’ என்ற புதிய திட்டத்தை சென்னையில் அறிமுகம் செய்துள்ளனர். அதன்படி, ஆம்புலன்ஸ் வாகனத்தில் உள்ள சைரன்களில் ஸ்மார்ட் சைரன் என்ற மென்பொருள் பொருத்தப்படும். இது பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ் சாலையில் வரும்போது, 200 மீட்டர் தூரத்துக்கு முன்பே சிக்னலில் உள்ளபெரிய திரையில் ஆம்புலன்ஸ் வருவதைக் காண்பிடிக்கும்.

மேலும், வாகன ஓட்டிகள் வழிவிடும்படி எச்சரிக்கை ஒலியும் எழுப்பும். இதைப் புரிந்துகொண்டு களப்பணியிலிருக்கும் போக்குவரத்து போலீஸாரும், வாகன ஓட்டிகளும் எளிதில் ஆம்புலன்ஸ் விரைந்து செல்ல வழிவகை செய்வார்கள்.

முதல்கட்டமாக சென்னையில் 3 தனியார் மருத்துவமனைகளில் 25 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 16போக்குவரத்து சந்திப்புகளில் இச்சேவை இணைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 40 சந்திப்புகளுக்கும் இந்த சேவையை விரிவுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் தொழில்நுட்ப திட்டம் நாட்டிலேயே முதன்முறையாக சென்னை போக்குவரத்து காவல் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர் தெரிவித்தார்.

முன்னதாக இந்த ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் தொழில்நுட்ப திட்டத்தை சேத்துப்பட்டு, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஈகா சிக்னல் அருகே போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர் நேற்று தொடங்கி வைத்தார்.

இதில் போக்குவரத்து காவல் இணை ஆணையர் என்.எம்.மயில்வாகனன், துணை ஆணையர்கள்சமே சிங் மீனா, சரவணன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.