சர்வதேச யோகா தினம்… ஸ்ரீநகரில் யோகாசனம் செய்த பிரதமர் மோடி.!!

யோகாசனங்களை மேற்கொள்வதன் மூலம் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகள் தவிர்க்கப்படுகின்றன. மன அழுத்தம், நீரிழிவை தவிர்ப்பது, உடல் ஆரோக்கியம் , உள்ளுறுப்புகளை சீராக இயங்க வைப்பது , நுரையீரல் பிரச்சனைகள், அல்சர் பிரச்சனைகள் , மூட்டு வலி உள்ளிட்ட பிரச்சனைகள் யோகாசனம் செய்வதால் ஏற்படாது என்று சொல்லப்படுகிறது.

அந்த வகையில் 2014 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொது சபையில் தொடங்கப்பட்டதை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு முதல் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி 2014 இல் தனது ஐநா உரையில் ஜூன் 21 பரிந்துரைத்தார்.இது வடக்கு அரைக்கோளத்தில் ஆண்டின் மிக நீண்ட நாள் மற்றும் உலகின் பல பகுதிகளில் ஒரு சிறப்பு முக்கியத்துவத்தை கொண்ட நாளாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 10-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காஷ்மீரில் நடக்கும் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். ஸ்ரீநகரில் தால் ஏரிக்கரையில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றுள்ளார்.