கோவையில் நாளை 4 மையங்களில் ஒருங்கிணைந்த ராணுவ தேர்வு நடக்கிறது..!

கோவை : மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த ராணுவ தேர்வுகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது .இந்த தேர்வு எழுத கோவை மாவட்டத்தில் 1,535 பேர் விண்ணப்பித்து உள்ளனர் .இவர்கள் தேர்வு எழுத வசதியாக மாவட்டம் முழுவதும் 4 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை மாவட்ட கலெக்டர் தலைமையில் துணைக் கலெக்டர் அந்தஸ்திலான 2 உதவி ஒருங்கிணைப்பாளர் கள், 4 தாசில்தார்கள், ,துணை தாசில்தார்கள் என இந்த தேர்வை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது தவிர இந்த தேர்வை கண்காணித்து ஆய்வு செய்ய மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு நடைபெறும் 4மையங்களிலும் செல்போன் ஜாமர்கள் நிறுவப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு தடையில்லா மின் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகரில் உக்கடம், ,கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் ,சூலூர் காந்திபுரம் மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து தேவையான பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத விண்ணப்பித்து உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு தொடங்கும் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக தேர்வு மையத்திற்கு வர வேண்டும். தேர்வு தொடங்கும் நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன் தேர்வு மையத்தின் நுழைவாயில் மூடப்படும் .அதன் பின்னர் வரும் தேர்வர்கள் கண்டிப்பாக தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் .தேர்வர்கள் செல்போன் உள்ளிட்ட மின்னணு கருவிகள் எதையும் எடுத்து வர வேண்டாம் என கலெக்டர் பவன் குமார் தெரிவித்துள்ளார்..