உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் இங்கு படிப்பை தொடர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உக்ரைன் போர் சூழல் காரணமாக, மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் அங்கிருந்து இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர். அவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர வாய்ப்பளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையில், உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு இந்தியாவில் இடம் ஒதுக்கீடு செய்ய முடியாது என மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. உக்ரைனில் படித்த இந்திய மாணவர்களுக்கு இங்கு கல்வி நிறுவனங்களில் இடமளிப்பது கல்வி தரத்தை குறைத்துவிடும் என விளக்கமளிக்கப்பட்டது. மேலும் இது புறவாசல் வழியாக இந்திய கல்லூரிகளுக்கும் நுழையும் முயற்சி என கூறப்பட்டது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், வெளியுறவு கொள்கை தொடர்பான மக்களவை குழு, இவர்களுக்கு இந்தியாவில் மருத்துவ படிப்பை மேற்கொள்ள அனுமதி அளிக்கலாம் என பரிந்துரைத்திருந்த நிலையில் மத்திய அரசின் இந்த நிலைப்பாடு மாணவர்கள் நம்பிக்கையை சிதைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
அரசு மருத்துவ கல்லூரிகளில் இந்த மாணவர்களை சேர்ப்பது கடினம் என்றால், இந்த ஒருமுறை மட்டும் தனியார் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் உருவாக்கி அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இந்த மாணவர்கள், இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரிகள் கட்டணம் உயர்வாக இருந்ததால் தான் உக்ரைன் சென்று கல்வி கற்கும் நிலை ஏற்பட்டது.
அதனால் தனியார் கல்லூரிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு கட்டண சலுகைகளும் வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை தொடர விரும்பும் மாணவர்களுக்கு, அங்கு உள்ள மருத்துவ கல்லூரிகளை கண்டறிந்து, இந்த மாணவர்கள் சரியான கல்லூரியை தேர்தெடுக்க உதவி செய்ய வேண்டும்.
ஏற்கனவே இந்த மாணவர்கள் ஒர் ஆண்டை இழந்துவிட்டனர். மேலும் தாமதிக்காமல் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டார்.