ஐ.நா.பொது சபையில் நாஜி கொள்கைக்கு எதிரான ரஷ்ய தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு..!

நியூயார்க்: ஐ.நா. பொதுச் சபையில் நாஜி கொள்கைக்கு எதிராக ரஷ்யா கொண்டுவந்த தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளித்தது.

106 நாடுகளின் ஆதரவுடன் ரஷ்யாவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஐ.நா. சபையில் சர்வதேச பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக, கலாச்சார, மனித உரிமைகள், அரசியல், நிர்வாகம், நீதி என 6 குழுக்கள் உள்ளன. இதில் சமூக – கலாச்சார – மனித உரிமைகள் குழுவின் கூட்டம் ஒவ்வோரு ஆண்டும் நவம்பரில் நடைபெறும்.

இந்தக் கூட்டத்தில், உறுப்பு நாடுகள் கொண்டு வரும் தீர்மானங்கள் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். இதன்படி, ரஷ்யா சார்பில் நாஜி, நவீன நாஜி, இனவாத ஒழிப்பு தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பாகிஸ்தான், வடகொரியா, சிரியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ரஷ்யாவுடன் இணைந்து இந்த தீர்மானத்தை தயார் செய்தன. இதன் மீது விரிவான விவாதம் நடத்தப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் இந்திய தூதர் ருசிரா கம்போஜ் பங்கேற்றார். பின்னர், இந்தியா உள்ளிட்ட 106 நாடுகள் ரஷ்யாவின் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. பெரும்பான்மை வாக்குகளுடன் தீர்மானம் நிறைவேறியது. அமெரிக்கா உட்பட 52 நாடுகள் எதிராக வாக்களித்தன. 15 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இதுகுறித்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அரசு வட்டாரங்கள் கூறும்போது, “நவீன நாஜிக்கள் ஆட்சி நடத்தி வருவதாகக் கூறி, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ரஷ்ய ராணுவம் உக்ரைனில் ஆயிரக்கணக்கான அப்பாவிகளைக் கொன்று, லட்சக்கணக்கான மக்களை அகதிகளாக்கி உள்ளது.போலி நாடகமாடும் ரஷ்யாவின் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தோம்” என்று தெரிவித்தன.

ரஷ்ய வெளியுறவுத் துறை வட்டாரங்கள் கூறும்போது, ‘நாஜிக்கள் கொள்கையை அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் ஆதரிக்கின்றன. இதன் காரணமாகவே நாஜி கொள்கைக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்து அந்த நாடுகள் வாக்களித்துள்ளன” என்று தெரிவித்தன.