போர் நடைபெற்று வரும் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.
உக்ரைனில் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையில், அண்டை நாடுகள் வழியாக சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.
எனவே, உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளான ருமேனியா, மால்டோவா, ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியர்கள் விரைந்த வண்ணம் உள்ளனர். அதேசமயம், பல்வேறு மாணவர்கள், சண்டை நடக்கும் பகுதிகளில் இருந்து வெளியேற முடியாமல் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். எனவே, உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்த அண்டை நாடுகளுக்கு மத்திய அமைச்சர்கள் 4 பேர் செல்கின்றனர்.
இந்நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், உக்ரைன் நிலவரம், இந்தியர்களை விரைவாக மீட்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
உக்ரைன் எல்லையில் நிலவும் மனிதாபிமான சூழ்நிலையை சமாளிக்க உக்ரைனுக்கு முதற்கட்ட நிவாரண பொருட்கள் இன்று அனுப்பப்படும் என்றும் பிரதமர் மோடி கூறினார். உக்ரைனில் சிக்கித் தவிக்கும் அண்டை நாடுகள், வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்தியா உதவும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
Leave a Reply