நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த துருக்கிக்கு உதவிய இந்தியா – விமானம் மூலம் பறந்தது முதல் கட்ட நிவாரணம்..!

திபயங்கர நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு இந்தியா சார்பில் முதல் கட்ட நிவாரணப் உதவி இன்று விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.

துருக்கியின் தென் மத்திய பகுதியில் திங்கட்கிழமை அதிபயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7.8 வரை பதிவான இந்த நிலநடுக்கங்களில் இதுவரை 4 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் உயிரிழ்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்தனர். இடிந்து விழுந்த கட்டிடங்களில் இன்னும் பலர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை எட்டிவிடும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தியா உடனடியாக துருக்கிக்கு நிவாரண உதவிகள் வழங்க முன்வந்தது. பிரதமர் நரேந்திர மோடி, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மக்களுக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

அதன்படி, இந்தியாவின் முதல் கட்ட நிலநடுக்க நிவாரணப் பொருட்கள் விமானம் மூலம் துருக்கிக்குப் புறப்பட்டுவிட்டதாக வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. “முதல் தவணையாக மருத்துவப் பொருட்கள், இடிபாடுகளை அகற்றுவதற்கான துளையிடும் கருவிகள் ஆகியவற்றுடன் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள், சிறப்புப் பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் துருக்கிக்கு அனுப்பவிவைக்கப்பட்டனர்” என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே. மிஷ்ரா தலைமையில் துருக்கிக்கு நிவாரண உதவி வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 100 வீரர்கள் அடங்கிய மீட்புக் குழுவையும், மருத்துவக் குழுவையும் தனித்தனி விமானங்களில் துருக்கிக்கு அனுப்ப முடிவெடுக்கப்பட்டது. அத்துடன் மீட்புப் படையினருக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் மருத்துவக் குழுவுக்குத் தேவையான மருந்துப் பொருட்களும் அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.

துருக்கி அரசும், அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகமும் ஒருங்கிணைத்து நிவாரணப் பொருட்களை வழங்கும் என பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.